இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

எச். ஏ. கிருஷ்ணபிள்ளை (ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளை)
 • எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை அவர்கள் 1827ம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி தென்னிந்தியாவில் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கரையிருப்பு எனும் ஊரில் சங்கரநாராயணபிள்ளை அவர்களுக்கும், தெய்வநாயகி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

 • இளமையில் வைணவ நூல்களையும், இராமாயணத்தையும் நன்கு கற்றுத்தேர்ந்த கிருஷ்ணபிள்ளை சமய வாழ்வின் நெறிமுறைகளை வழுவாது வைராக்கியத்துடன் பின்பற்றினார்.

 • கிறிஸ்தவம் வேகமாக பரவிக்கொண்டிருப்பதை அறிந்த கிருஷ்ணபிள்ளை, தாம் நற்செய்தி எதிர்ப்புக் கழகத்தில் சேர்ந்து கிறிஸ்தவத்தை எதிர்த்து செயல்படத் தொடங்கினார்.

 • 1852ம் ஆண்டு சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியமர்ந்த கிறிஷ்ணபிள்ளை அவர்கள் அங்கு மிஷனரியாகப் பணியாற்றிய "ஹக்ஸ்டபிள்" குடும்பத்தினரின் நற்குணச் செயல்களினால் பெரிதும் கவரப்பட்டார்.

 • ஏற்கனவே தமிழ்ப் புலமைபெற்றிருந்த அவர், வடமொழியையும் கற்றுத்தேர்ந்தார். அச்சமயம் கிருஷ்ணபிள்ளையின் சகோதரர் தனுக்கோடி ராஜீ மற்றும் முத்தையா ஆகியவர்கள் கிறிஸ்தவத்தை தழுவி மனம்மாறியமை இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 • தனது சமய பக்திப்பாடல்களை நெஞ்சுருக பாடி வந்த அவர், அந்நாட்களில் மோட்சப் பிரயாணம், புதிய ஏற்பாடு, இளமை பக்தி போன்ற நூல்களையும் வேதாகமத்தையும் படித்தார். ஒரேநாளில் ஆதியாகமம் முதல் யாத்திராகமம் 20ம் அதிகாரம் வரை படித்தவர், அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையான நிகழ்ச்சி என்பதனை அறிந்துகொண்டார்.

 • அதன் பின் கிறிஸ்துவை இரட்சகராக கண்டு கொண்ட அவர், அவருடைய அன்பும் அருளும் அவரை ஏவியதால் கிறிஸ்துவுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க உறுதிகொண்டார்.

 • வேதாகமத்தில் தனக்கு ஏற்பட்ட ஐயங்களை தனுஷ்கோடி ராஜீவிடம் கேட்டு விளக்கம் பெற்று, கிறிஸ்தவமே மெய்யான வழி என்ற தெளிவையும் பெற்றுக்கொண்டார்.

 • 1858 ஏப்ரல் 18ம் திகதி மயிலாப்பூரிலுள்ள தூய தோமஸ் திருச்சபையில் ஹென்றி ஆல்ஃபிரட் கிருஷ்ணபிள்ளையென்ற பெயருடன் திருமுழுக்கு ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். 1860ம் ஆண்டு இவரது மனைவியும் மூன்று பெண்பிள்ளைகளும் கிறிஸ்து இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள்.

 • இலக்கிய வாஞ்சையுள்ள இவர், அதை தம்மை ஆட்கொண்ட இறைமகன் இயேசுவைப் பற்றிய உண்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க ஒரு கருவியாக பயன்படுத்தினார்.

 • திருநாம ஸ்மரணை, திருநாம பதிகம், காலைத் துதி, பிழைநினைந்திரங்கல், கிறிஸ்துவே எனக்கெல்லாம், கையடைப்பதிகம், விசுவாசக்காட்சி, வேட்கைப்பதிகம், அந்திப்பலி, கடைக்கணிப்பதிகம், இரட்சணிய சமய நிர்ணயம், போற்றித் திருவிருத்தங்கள், எண்பொருள் பதிகம் ஆகிய 13 தேவாரங்களும் அடங்கிய „இரட்சணிய தேவாரம் என்பன கிருஸ்ணபிள்ளையினால் இயற்றப்பட்டது.

 • "கிறிஸ்துவே எனக்கெல்லாம்" எனும் பதிகத்தில் எனக்கார் துணை யாருறவே என இறைவனை நோக்கிக் கேட்கும் அவரது முதற்பாடலான கீர்த்தனையில் பக்தி பரவசத்தை உணர முடிகின்றது.

 • தமிழ் பண்டிதராக சாயர்புர கல்லூரியில் பணியாற்றிய இவர், ஆத்தும அறுவடைபணியிலும் ஈடுபட்டார். ஊவாக்கர் குரு இவரை „மனிதரை பிடிக்கிறவர் என அழைத்தார்.

 • இவர் ஏராளமான கிறிஸ்தவ பாடல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு "இரட்சணிய மனோகரம்" என அழைக்கப்படுகிறது. 1887 இல் தலைசிறந்த காப்பியமான இரட்சணிய யாத்ரீகம் எனும் நூலை எழுதினார்.

 • கிருஸ்ணபிள்ளை அவர்கள் "கிறிஸ்தவ கம்பன்" என அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய சந்தாய் நிஷ்களமாய் பாடல் இன்றும் தேவாலயங்களில் விரும்பி பாடப்படும் கீர்த்தனையாகும்.

 • 1900 பெப்ரவரி 3ம் நாள் தமது 73ம் வயதில் மரித்த இவர் சமாதானப்புரத்திலுள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

  இறைவனையே தன் துணையாகக் கொண்டு வாழ ஒரு மனிதன் முன்வரவேண்டும் என்பதற்கு கிருஷ்ணபிள்ளையின் இவ்வுலக வாழ்வு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.