பெத்லகேம்
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களாலும் புனிதமான இடமாக கருதப்படும் பெத்லகேமைப் பற்றியது.
இயேசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இறைவன், இயேசு எனும் யெரில், மனித உருவில் பிறந்த ஊர் பெத்லகேம். உலகிலுள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களாலும் புனிதமான இடமாக கருதப்படும் பெத்லகேம், இஸ்ராயேல் நாட்டில் எருசலேம் நகருக்கு தெற்கில் பத்து கி.மீ., தூரத்தில் உள்ளது.
பெத்லகேம், கிறிஸ்துவர்களுக்கு இயேசு பிறந்த இடம். முஸ்லீம்களுக்கு முகமது நபி எருசலேம் போகும் வழியில் அங்கு நின்று பிரார்த்தனை செய்த இடம். யூதர்களுக்கு யூத குலத்தில் தலைவி ராக்கேல் புதைக்கபட்ட இடம் என்பதுடன், யூத அரசன் தாவீது பிறந்து, அரசனாக அபிஷேகம் செய்யப்பட்ட இடம் என மூன்று பிரிவு மக்களுக்கும் மிக முக்கிய புனிதமான இடமாகும்.
பெத்லகேம் என்ற பெயருக்கு எபிரேய மொழியில் 'ரொட்டியின் இல்லம்' என்றும், அரேபிய மொழியில் 'லாம் தேவதையின் இல்லம்' என்றும், 'இறைச்சியின் இல்லம்' என்றும் பொருள். பெத்லகேமுக்கு 'எப்ராத்தா' என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதற்கு 'கனி தருவது' என்று பொருள். பெத்லகேமில் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதில், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் சரி சமமான எண்ணிக்கையில் உள் ளனர்.
நாசரேத் ஊரிலிருந்து பெத்லகேம் 130 கி.மீ., தெற்கில் இரண்டாயிரத்து 350 அடி உயர மலைச் சரிவில் அமைந்துள்ளது. மலைச்சரிவெங்கும் ஆலிவ், ஆல்மண்ட், அத்திமரத்தோப்புகள் அழகாய் காட்சியளிக்கும்.
பெத்லகேமில், 'பிறப்பு கோயில்' என்ற ஆலயம் கி.பி. 333ம் ஆண்டு கான்ஸ்டான்டைன் பேரரசனால் கட்டப்பட்டது. இக்கோயில் நுழைவாயில் நான்கரை அடி உயரமே கொண்டது. கோயிலில் பெரிய பீடத்திலிருந்து இருபுறங்களிலும் 15 படிக்கட்டுகள் கீழே பூமிக்குள் செல்கிறது. அதில் இறங்கிச் சென்றால் இயேசு பிறந்த இடம் உள்ளது. அது 'பிறப்பு குகை' என்று அழைக்கப் படுகிறது. 12.3 மீட்டர் நீளமும், 3.15 மீட்டர் அகலமும் கொண்ட இக்குகையின் அடித்தனம் வெள்ளைப் பளிங்குக் கற்களால் ஆனது. அதன் மேல் 14 முனை கொண்ட பொன்னிற நட்சத்திர தகடு பதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் 15 எரியும் விளக்குகள் தொங்குவதை காணலாம்.
தரையில் லத்தீன் மொழியில் 'இங்கு கன்னிமரியிடமிருந்து இயேசு கிறிஸ்து பிறந்தார்' என்ற வாசகம் உள்ளது. அருகில் மாதாபீடம் ஒன்று உண்டு.
முதலாவது, புனித சூசை சிற்றாலயம். வானதூதர் சூசைக்கு கனவில் தோன்றி, குழந்தையும், தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்கு தப்பிச் செல்லுமாறு கூறிய இடம்.
இரண்டாவது, மாசில்லாக் குழந்தைகள் சிற்றாலயம். ஏரோது அரசனால் பெத்லகேமில் கொலை செய்யப்பட்ட இருபது ஆண் குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ள இடம்.
மூன்றாவது, புனித ஜெரோம் சிற்றாலயம்:
கி.பி.380-420 வரை புனித ஜெரோம் இக்குகையில் தங்கி பைபிள் புத்தகத்தை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இதைத் தவிர பெத்லகேமிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் சமவெளிப் பகுதியில் பெரிய பாதை குகை ஒன்று உள்ளது. இயேசு பிறந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த இடையர்கள்கள் முன் வானதூதர் தோன்றி, இயேசு பிறந்த நற்செய்தியை அறிவித்தது இந்த இடத்தில்தான். இது இன்று 'இடையர் குகை அல்லது இடையர்காடு' என்று அழைக்கப்படுகிறது