இளமையில் பொறுமை

நங்கையர் நறுமண முகாமில் அளிக்கப்பட்ட இறுதிச் செய்தி-Mrs. Zoraida Samuel, Paraniputhur
'BUSYு' என்கிற ஆங்கிலப் பதத்தின் விரிவாக்கம் ''Being Under Satan's Yoke' (சாத்தானின் நுகத்திற்கடியில்) என ஒரு நண்பர் எனக்குச் சொன்னார். இளைஞர்க்கு, 'நான் ரொம்ப பிஸி' என்று சொல்லிக்கொள்வதே ஒரு நாகரீக மரபாகிவிட்டது. "பிஸி பிஸி என்று சொல்லும் மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது" என்று அன்னை தெரசா குறிப்பிட்டார். வெற்றிகரக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இளமையில் பொறுமை மிகவும் அவசியம்.




கிரகங்களின் பயணப்போக்கை நிர்ணயிக்கும் விதிகளை ஆராய்ந்த கெப்லர் (Kepler) என்ற விஞ்ஞானியின் கொள்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர் வாழ்நாள் முழுவதும் பட்டப் பாடுகள் வியர்த்தமாய்ப் போனதுபோன்ற சூழ்நிலையில், மரணப்படுக்கையில்கிடந்தார். "தங்களது ஆராய்ச்சிகளெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டு, கண்ணை மூடும் வேளையிலும் அவைகளின் பலனைக் காணாதது வேதனையாயில்லையா?" என வினவிய தன் நண்பரிடம், "விண்மீன்களுக்குத் தாம் விதித்த விதிகளைத் தமது படைப்பாகிய மனிதனொருவன் புரிந்து கொள்வதற்கு 5000 ஆண்டுகள் கடவுளே காத்திருக்கவேண்டுமானால், எனக்கு நியாயம் கிடைக்க நான் காத்திருக்கக் கூடாதா?" எனக் கெப்லர் பதில் வினா எழுப்பினார்.

 

நான் காத்திருக்கக் கூடாதா?

அண்டசராசரங்களையும், அவைகளிலுள்ள அனைத்தையும் படைக்க ஆறே நாட்கள்தான் கடவுளுக்குத் தேவைப்பட்டன. ஆனால், நமக்குள்ளாகச் செயல்பட அவர் எவ்வளவு பொறுமையோடிருக்கிறார்! நமது வயது 18, 20 அல்லது 21 என இருக்கலாம். அத்தனை ஆண்டுகளும், நமக்குக் குறிக்கப்பட்ட நிலையை நாம் அடைய, நமக்குள் கடவுள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது அன்புக்கும், பொறுமைக்கும் அளவுண்டோ? இவ்வளவு பொறுமையுள்ள இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் பொறுமையோடிருப்பது அவசியமல்லவா?

 

கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்ட நாமனைவரும் ஓட்டப்பந்தயம் ஒன்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம் (எபி 12:1). விளையாட்டுப் போட்டியின் பந்தயங்களைப் போலன்றி, இப்பந்தயத்தில் "பொறுமையோடு" ஓடவேண்டுமாம். நாம் ஓடத்துவங் கும்போது விதவிதமான பிரச்சனைகள் எழும்பும். பார்வையாளர் சிலர் உங்களது தீர்மானத்தைப் பரிகசிக்கலாம். "எவ்வளவு காலம் கிறிஸ்துவைத் தொடர்வாள்? எவ்வளவு காலம் பரிசுத்தம் காப்பாள்? எவ்வளவு காலந்தான் வேத வாசிப்பில், ஜெபத்தில் தாக்குப்பிடிப்பாள்? பார்க்கத்தானே போகிறோம்!" என அவர்கள் (நண்பர்கள்/சகோதர சகோதரிகள்) சொல்லலாம். அவற்றைக் காதில் போட்டுக்கொள்ளவேண்டாம். களத்திலிருந்து கவனத்தைச் சிதறடிக்க சாத்தான் சோதனைகளைக் கொண்டுவருவான். அச்சோதனை நீங்கள் முன்னாளில் நேசித்த நபர், சூழ்நிலை அல்லது பொருளாக இருக்கலாம், கவனம்!

 

லூக்கா 8:15இல் நல்ல மண்ணில் விழும் விதை பற்றி ஆண்டவர் சொல்கையில், "நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்" என்றுரைத்தார். கிறிஸ்தவ வாழ்வின் தரம் பொறுமையின் மூலமாகவே வெளிப்படும்.

 

உங்களையே சோதித்தறிவதில் பொறுமை

"உங்கள் பொறுமையினால் உங்கள் ஆன்மாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்" (லூக் 21:19). இளமைப் பருவத்தில் நம்மை நாமே ஆராய்வதற்கென்று நேரம் கிடைப்பது மிகவும் அரிது. நம்மைப்பற்றிய பிறரின் கணிப்பைப் பற்றி மிகவும் கவலை கொள்கிறோமேயன்றி, நமது 'உள் மனிதனைக்' கண்டு கொள்வதேயில்லை. நம்மைப் பற்றி நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்போமேயானால் எத்தனையோ பாவங்களையும், சறுக்கல்களையும் தவிர்த்திருப்போம்.

 

கடந்தகாலத் தவறுகளுக்காக வருந்துகிறோம். ஆனால் அவைகள் மறுபடியும் நிகழாவண்ணம் தவறிய தருணங்களைப் பொறுமையோடு ஆய்வு செய்திருக்கிறோமா? பொறுமையாய் உங்களை ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லுமுன்னர், "இன்று என்னென்ன நன்மைகள் செய்துள்ளேன்? என்னென்ன தவறுகளைக் களைந்திருக்கிறேன்? ஏதாவதொன்றினால் இன்று நான் மேம்பட்டிருக்கிறேனா?" என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

பூரணமாகுதலில் பொறுமை

"ஒரு மரத்தை வெட்ட எனக்கு 8 மணி நேரம் கொடுப்பீர்களேயானால், அதில் 6 மணி நேரம் என் கோடரியைக் கூராக்குவதில் செலவழிப்பேன்" என்றொருவர் சொன்னார். வான் மட்டும் கட்டிடங்கள் கட்டப்பட ஓரிரு ஆண்டு ஆனாலும், அதற்காகத் திட்டமிட அநேக ஆண்டுகள் செலவழிப்பர். உங்களது கல்லூரியிலிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ வீட்டிற்கு நடந்து செல்லும்போது, ஒரு சிறு கல்லில் இடறி விழுந்து விட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம், என்ன செய்வீர்கள்? உடனே எழுந்து, தூசு தட்டிவிட்டுத் தொடர்ந்து செல்வீர்களா அல்லது நடக்கும் முயற்சி தடைபட்டதே என்று விழுந்தபடியே கிடப்பீர்களா? அதுபோலவே, நமது பந்தயத்திலும் பல தடைகள் எழலாம். விழுந்தாலும், எழுந்து பொறுமையோடு ஓட்டம் தொடர்வோம். "நீங்கள் குறைவே இல்லாதவர்களாய் முதிர்ச்சியும் முழுமையும் அடையும்படி பொறுமை நிறைவாய்ச் செயல்படட்டும்!" (யாக் 1:4).

 

"நான் தினமும் சோதிக்கப்படுகிறேன். இன்று நான் சோதிக்கப்படவில்லையெனில், நேற்றே ஒரு சோதனையில் விழுந்துவிட்டேன் என்றுதான் அர்த்தம் கொள்வேன்" என பில்லி கிரஹாம் சொன்னதாகச் சொல்வர்.

 

ஜெபத்திற்குப் பதில் வரக் காத்திருப்பதில் பொறுமை

ஜெபத்திற்கான பதில்கள் மூன்று வகையில் வரும். சில வேளைகளில் 'இல்லை' என்றும், பல வேளைகளில் 'பொறு' என்றும், அபூர்வமாக 'ஆம்' என்றும் வரும்.

 

ஜெப வேளையில் ஆண்டவரிடம் யோபு கதறியழுதாலும், பதில் வருவதற்குப் பொறுமையோடு காத்திருந்தான் (யாக் 5: 10,11). தானியேலும், தன் ஜெபத்தின் பலனைக் காண அநேக நாள் காத்திருக்க வேண்டியிருந்தது (தானி 10:12). உங்களுக்கான பதிலைக் கையில் கொண்டிருக்கும் தேவதூதன் இருளின் ஆவியோடு போராடிக்கொண்டிருக்கலாம். சில காரியங்களுக்காக ஜெபித்துப் பதில் வரத் தாமதமாகி, நீங்கள் மனம் வெதும்பி, கடவுள் கண்டுகொள்ளவில்லை எனத் தவறாகக் கருதிச் சோர்ந்துபோயிருக்கலாம். ஆனாலும், பிரிய சிநேகிதியே! உனக்கு அதிகப் பொறுமை அவசியம் (எபி 10:36; யாக் 1:3). கடவுளின் பதில்கள் தாமதமாய் வரலாம். ஆனால் அவை ஒருபோதும் வரவேண்டிய நேரத்திற்குப் பிந்துவதில்லை.

 

வேதம் வாசிப்பதில் பொறுமை

கடவுளை உண்மையாய்த் தேடுவோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். நமது வேகவேகமான வாழ்க்கைமுறையில் தியானிப்பதற்கு நேரம் இல்லை. நாட்காட்டியின் வசனங்களையும், சுருக்கமான தினத்தியானப் புத்தகங்களையும் வாசிப்பது வசதியாய்ப் போய்விட்டது.

 

கடவுளின் வார்த்தை ஒரு காதல் கடிதம். காதல் கடிதத்தின் பரிமாணங்களையும், பாதிப்புகளையும் வாலிபர் நங்கையரன்றி வேறோருவர் புரிந்துகொள்ளக் கூடுமோ? தொலைவில் வாழும் கணவனின் கடிதத்தைக் கையில் பெறும் இளம் மனைவியை மனக்கண்ணால் பாருங்கள். எப்படி அதனை வாசிப்பாள்? சமையலறையில் வாசித்து, தலையணைக்கடியில் வைத்து, பின்பு வாசித்து, மறுபடியும் வாசித்து, எங்கும், எப்போதும் வாசித்துகொண்டே...! கடவுளின் புத்தகத்தை நாம் இப்படியே வாசிக்கவேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. உண்மையிலேயே நாம் கடவுளை நேசித்தால் அவரது வார்த்தையைப் பொறுமையோடு வாசிக்கவேண்டும். நற்செய்தியாளர் ஒருவர் ஒரு வழக்கறிஞரைப் பார்க்கச் சென்றார். வழக்கறிஞரின் சட்டப் புத்தகங்கள் மேசையில் இரைந்தும், ஆன்மீகப் புத்தகங்கள் கைப்படாமல் தூசியேறி அலமாரியில் நிறைந்தும் கிடந்தனவாம். இதனைப் பார்த்த நற்செய்தியாளர், "நண்பரே! இகத்தை மேசையிலும் பரத்தை அலமாரியிலும் வைத்துள்ளீர்களே!" என வழக்கறிஞரிடம் சொன்னாராம்.

 

அறுவடையில் பொறுமை

பக்கத்து வீட்டுக்காரருக்கு வாழ்நாள் முழுதும் படிக்கக் கிடைத்த ஒரே வேதப் புத்தகம் நீங்களாகவே இருக்கலாம். உலகம் முழுதும் தமது வார்த்தையைக் கேட்பதற்காகக் கடவுளே பொறுமையோடு காத்திருக்கும்போது நீங்கள் ஏன் அவசரப்படவேண்டும்? சிலர் நற்செய்தியைச் சரியாய் ஏற்றுக்கொள்ளாத வேளையில், பொறுமையின்றி வெகு விரைவில் அவர்களைக் கைகழுவி விடுகிறோம்.

 

உலகின் ஒளியாயிருக்கும்படி நம்மை இயேசு தெரிந்துகொண்டார். பேசாதிருந்தும் ஒளி தனது பிரசன்னத்தை உணரச்செய்கிறது. சத்தமின்றியே கலங்கரை விளக்கம் கப்பல்களைக் கரைசேர்க்கிறது; சத்தமின்றியே விளக்கு தனதருகில் வருவோர்க்கு வெப்பமும், வெளிச்சமும் அளிக்கிறது; ஒளியின்றி தாவரங்கள் பிழைக்க இயலாது. முதல் இந்திய ஆத்துமாவைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வில்லியம் கேரிக்கு ஏழு வருடப் பொறுமை அவசியமானது... அதுவும், நமது நாட்டில் தனது மனைவியையும், குழந்தையையும் மரணத்தில் விதைத்த பின்னர்! நீங்கள் வாழும் அழகை உங்களைச் சுற்றியுள்ளோர் வாசிக்கிறார்கள். உலகம் உங்களில் தேடும் உன்னத லட்சணம் பொறுமையே.

 

"கடவுளின் அன்மைப் பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக" (2 தெச 3:5).