சுமார் 500 ஆண்டுகள் கழித்து இயேசு தனது சீஷர்களிடம் உலக முடிவைக்குறித்து விளக்குகையில் தானியேல் கண்ட அந்த "பாழாக்கும் அருவருப்பு" பரிசுத்த ஸ்தலத்திலே (Dome of Rock) நிற்பதைக் காணும் போது முடிவு சமீபம் என்று அறிந்து கொள்ளலாம் என்றார். (மத்தேயு 24:15)
Dome of Rock (உமர் மசூதி)
மீண்டும் கி.பி.90 ஆம் ஆண்டு வாக்கில் இயேசுவின் சீஷர்களுள் ஒருவரான யோவான் தனது தரிசனத்தில் உலக முடிவைக்கண்ட போது இறைவன் அவருக்கு மேலும் சில விபரங்களை வெளிப்படுத்தினார். உதாரணமாக அங்கே அந்திகிறிஸ்து மக்களின் மேல் பதிக்கும் முத்திரைகளைக் குறித்து அவர் பேசுகிறார்.
"அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவும் கூடாதபடிக்கும் செய்தது." (வெளி:13:16-17) இந்த முத்திரைகளை இயேசுவை விசுவாசிக்கும் பக்தர்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது என்று வேதம் அறிவிக்கிறது.
மேற்கண்ட வசனம் இந்த முத்திரை, பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறை என்பதை தெளிவுறுத்துகிறது. இன்றும் இத்தகைய முத்திரைகள் மேலை நாட்டு "ஸ்மார்ட்"(smart) அட்டைகளில் உபயோகிக்கப் படுகின்றன. இவற்றை கார்டுகளில் பதிப்பதைவிட மனித உடலில் பதிப்பதில் பல விதமான அனுகூலங்கள் உண்டு. முத்திரை பதிக்க சிறந்த இடம் சுட்டுவிரலுக்கும், நடு விரலுக்கும் இடைப்பட்ட தசைப்பகுதி என்கிறார்கள். இதனை இன்று எத்தனை பேர் விரும்பிப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு கேள்விக்குறியே. ஆனாலும் உலகளவில் ஒரு பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்டு இந்த முத்திரையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எதையும் விற்கவோ வாங்கவோ முடியாது என்ற ஒரு நிலைமை ஏற்படுமானால் நிர்ப்பந்தத்தின் நிமித்தம் மக்கள் இந்த முத்திரையை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள்!
அமெரிக்க அரசு, தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை என்றோ உடைத்தெறிந்து விட்டது! இவ்வுலகமெங்கும் புழக்கத்திலிருக்கும் கணக்கே இல்லாத டாலர்களின் மதிப்பிற்கு ஒப்பான தங்கக் கட்டிகள் அமெரிக்க அரசின் கஜானாவில் இல்லை. ஆக டாலரின் மதிப்பு நமது சிந்தனையில்தான் உள்ளது. மக்கள் நம்பினால் அதன் மதிப்பு சர்வதேச பணச்சந்தையில் மேலே போகும். ஆனால் நிலைமை கீழே போவதற்கும் வாய்ப்பு உண்டு! அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ந்து போனால் (அல்லது வீழ்த்தப்பட்டால்) உங்கள் நாட்டு நாணயத்தின் மதிப்பு எத்தனை என்று உங்களால் கூற முடியுமா? இது ஒரு அபாயகரமான நிலைமை. நினையாத வேளையிலே விபரீதங்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இவையெல்லாம் நிகழும் முன்னர், மூடிக்கிடந்த சீன மற்றும் இந்திய பொருளாதாரங்களைத் திறந்து அவைகளை அமெரிக்க டாலருடன் பின்னிப் பிணைக்க வேண்டும். அப்போதுதான் டாலர் விழும் போது முழு உலகமும் அதனுடன் சேர்ந்து கீழே விழும்!
இன்று கூட அமெரிக்க மண்ணிலேயே, அமெரிக்க அரசு உட்பட, எந்த உலக அரசும், எந்தக் குற்றத்தின் நிமித்தமும் கைது செய்ய இயலாத, பணம் படைத்த, செல்வாக்கு மிக்க உறுப்பினர்களைக் கொண்ட உலக அங்கம் ஒன்று உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது... உலகத்தின் அதிகாரங்களுக்கெல்லாம் மேலான அதிகாரம் ஒன்று இவ்வுலகில் ஏற்கனவே உள்ளது, அதற்கான தருணம்தான் இன்னமும் வரவில்லை!
சுருக்கமாகச் சொல்லப்போனால், உலக முடிவைக் குறித்துப் பேசுகையில், முதலில் வருவது ஒரு உலகளாவிய பொருளாதார நெருக்கடி. பின்னர் புதியதொரு உலகப் பொருளாதார முறை அறிமுகப்படுத்தப்பட்டு இவ்வுலகம் ஒரு உலகத்தலைவனின் கீழ் வரும். மத்திய கிழக்கிலே ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்படும். முழு உலக அரசாங்கம் (One World Order) அரங்கேறும். எல்லா மதங்களையும் மதிப்பது போல நடிக்கும் இந்த அரசின் தலைவனான அந்திக்கிறிஸ்து, உலக மதத்தினருடன் ஒரு சமாதான உடன்படிக்கை செய்வான். யூத மதத்தினர் முன்னாட்கள் போலவே தங்கள் தேவாலயத்தில் பலிகளிட்டு தேவனை வணங்க ஆரம்பிப்பர். அதன் பின், சுமார் மூன்றரை ஆண்டு காலம் கழித்து, மத சுதந்தரங்கள் அபகரிக்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், எந்த விதமான மத நம்பிக்கை உள்ளவரும் நிந்திக்கப்படுவார்கள். இவற்றை நான் சொல்லவில்லை, வேதம் சொல்லுகிறது!
அந்திக்கிறிஸ்துவைப்பற்றி மற்றொரு சுவாரசியமான விஷயம்... மாபெரும் சாம்ராச்சியங்கள் பெண்ணாசையால் வீழ்ந்து போயின என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது இங்கே கூடாத காரியம். காரணம், அந்திக்கிறிஸ்து பெண்ணாசையே அற்றவனாக இருப்பானாம்! இருப்பினும், மக்களின் பேராதரவுடன் தொடங்கும் இந்த அரசாங்கம் பல எதிர்ப்புகளுக்கு உட்பட்டு ஏழே ஆண்டு காலத்தில் வீழ்ந்து விடும் என்று வேதம் அறிவிக்கிறது.
அது மட்டுமல்ல, அருமை ரட்சகர் இயேசுவும் இந்தக் காலங்களைக் குறித்து பல அறிகுறிகளைத் தந்திருக்கிறார்: "ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் (ethnic conflicts), ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும் (wars). பஞ்சங்களும் (Africa), கொள்ளை நோய்களும் (AIDS), பூமியதிர்ச்சிகளும் (Sunami, Earthquake) பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்." (மத்தேயு 24:7-8) என்கிறார் அவர்.
மேலும், தனது சுவிசேஷம் உலகமெங்கும் பிரசங்கிக்கப்படும், பின்பு முடிவு வரும் என்று இயேசு கூறினார். அதையும் நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். மிஷினரிகள் மற்றும் தேவாலயங்கள் மூலமாக மட்டுமல்லாமல் திரைப்படங்கள், டி.வி.டி, வானொலி, டி.வி, புத்தகங்கள், செயற்கைக் கோள்கள், இண்டர் நெட் என பல உத்திகள் மூலமாகவும் உலக சரித்திரத்தில் என்னாளும் இருந்திராவண்ணம், இயேசுவின் சுவிசேஷம் இன்று உலகமெங்கிலும் அறிவிக்கப் படுகிறது. இந்தக் குறிகளையெல்லாம் காணும் சந்ததி(நமது சந்ததி?) உலக முடிவையும், தனது இரண்டாம் வருகையையும் காணும் என்றும் இயேசு கூறினார்.
இயேசு மகிமையோடே திரும்ப வரும் பொழுது, அவர் மரித்தோரையும் உயிருள்ளோரையும் நியாயம் தீர்ப்பார் என்று வேதம் அறிவிக்கிறது. ஒரு வேளை நான் கூறுவதை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். இருப்பினும் இதனை நான் திட்டவட்டமாக நம்புகிறேன். காரணம், வேதம் உரைத்த பல, பல சம்பவங்கள் நடந்தேறி விட்டதைப் பார்க்கும் பொழுது, நாளையைப் பற்றிய இந்த வேதவாக்குகளை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை!
இயேசு இவ்வுலகை நியாயம் தீர்க்க வரும் நாளில், நாம் உத்தமர்களாகக் காணப் படுவோமா? கீழ் காணும் பிராத்தனை மூலம் அவரை உங்கள் வாழ்வின் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். நியாயத்தீர்ப்பு நாளில் அவர் உங்களை ரட்சித்து, தம்வசம் சேர்த்துக் கொண்டு, உங்களை ஆசீர்வதிப்பார்!
பிராத்தனை:
அன்புள்ள இயேசுவே, எனது பாவங்கள் தீர உம்மையே நீர் பலியாகத்தந்த அன்பிற்காக உமக்கு நன்றி. இன்று நீர் என் இதயத்தில் வாரும். என் பாவங்கள் யாவையும் மன்னியும். நீர் இலவசமாய் அருளும் நித்திய ஜீவனை எனக்குத் தந்தருளும். என்னையும் உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கும் உமது மகா அன்பை எனக்குத் தாரும். ஆமென்.