இந்த கேள்வி நீங்கள் கேட்டது உண்டா?

மாபெரும் கேள்வி - பிலிப்பி பட்டணத்தின் சிறைச்சாலைக்காரன்

 

அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன
செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, (அப்16:30-31)

இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? மிகவும் அதிர்ச்சியடைந்தவனாய்ச் சிறைச்சாலைக்காரன் கேட்க கேள்வி இதுவே. அவன் தன்னால் விளங்கிக்கொள்ளமுடியாதவாறு கலக்கமளிக்கிற ஒருவகையான சூழ்நிலைக்குள் இருந்தான். அதிசயமான காட்சிகளைக் கண்டான். முன்பின் அறியாப் பேரச்சமானது அவனை ஆட்டிப் படைத்தது. மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தான். ஆகையால்த்தான் அவன், அண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? (அப்.16:30) என்று கேட்டான். தன்னை நடுநடுங்கப்பண்ணுகிற பேரச்சத்தினின்றும் விடுதலை பெறுமாறு அவன் இந்த அனந்த ஞானமுள்ள கேள்வியைக் கேட்டான்.

இந்தக் கேள்வியைச் சிறைச்சாலைக்காரன் மாத்திரமே கேட்டானேயெனில் அன்று. அக் கேள்வியைக் கேட்ட முதல் மனிதனும் அவனல்ல. எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலுமுள்ள மக்கள் யாவரும் அந்தக் கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு விடைகாணும்படி நாடி ஓடுகிறார்கள். பண்டைக்காலத்தில் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்த கிரேக்கர் இக்கேள்வியைக் கேட்டு விடைகாணமுடியாமல், அறியப்படாத தேவனுக்கு என்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன் வாயிலாக விடைகாண முயன்றனர் (அப்.17:23). இந்தக் கேள்விக்கு ஏற்புடைய விடைகாணும் பொருட்டு அக்கினி பகவான் என்று பொருள்படுமாறுள்ள மோளேகு என்னும் தெய்வத்திற்கு மக்கள் தங்கள் குழந்தைகளைப் பலியிட்டனர். இந்தக் கேள்விக்கு விடைகாணும் போராட்டத்தில் இன்றும் இந்தியாவில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைக் கங்கையாற்றில் எறிந்துவிட்டு, வெறுங்கையராய் வெற்றிடமான தங்கள் இதயங்களோடு தங்கள் இல்லங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

ஆபிரிக்கா கண்டத்தின் நடுமையப்பகுதியிலிலிருந்து வருகை செய்த ஒரு மிஷனறி ஊழியர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆபிரிக்காவின் உள் நாட்டுப் பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த ஒருவகையான அநாகரிக மக்கள் கூட்டத்தின் நடுவே அவர் ஊழியஞ்செய்துகொண்டிருந்தார். அவர்கள் மிகவும் தாழ்ந்த இனத்தவர்கள். ஆடையின்றி நிர்வாணகோலத்துடன் அவர்கள் காட்சியளித்தார்கள். ஆயினும் அவர்கள் தங்களது சமயத்தொடர்புடைய கொண்டாட்டங்களில் காட்டுமிராண்டித்தனமான நடனங்களில் ஈடுபடுவார்கள். அவ்வமயங்கள் அவர்கள் சுழன்று சுழன்று தங்கள் வாயினின்று உமிழ் சுரந்து நுரைதள்ளு மட்டும் பம்பரம்போல் ஆடி, இறுதியில் மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிடுவார்கள். இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்னும் வினாவிற்கு விடைகாணும்வரையில் அவர்களுடைய மார்க்க வழிபாடு அவ்வாறிருந்தது.

சிறைச்சாலைக்காரனுடைய வாழ்க்கையில் உயிர்த்துடிப்பும், தீடீர்த்திருப்பமும் உண்டாதற்குரிய வேளை அதுவே. அவனது பேராசீர்வாதங்களுக்குரிய வேளையும் அதுவே. அங்கே சிறைச்சாலைக் காட்சியினைப் பாருங்கள். புதுமையான பிரசங்கிமார் இருவர். அந்தப் பிலிப்பி பட்டணத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடைய மார்க்கப் பிரசாரமானது பட்டணத்திலுள்ள அதிகாரிகளுடன் முரண்படுமாறு மோதுகிற ஒருவகையான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. மக்கள் அவர்களைச் சந்தை வெளியிலுள்ள அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அதிகாரிகள் அப்பிரசங்கிமார் இருவரும் உடுத்தியிருந்த உடுப்புகளைக் கிழித்து அவர்களை நையப்புடைத்து அடித்து துன்புறுத்தினர்.

அதிகாரிகளின் செய்கை பிரசங்கிமார்களுக்கு அவமானத்தையும் வேதனையையும் உண்டுபண்ணினவோவென்று நினைக்குமாறு காட்சியளிப்பினும், பிரசங்கிமார்களின் மெய்யான அவல நிலை அதுவன்று, பின்னர் அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கொடிய சிறைச்சாலைக்காரனிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களைச் சிறைச்சாலையின் உள் காவலறையில் அடைத்து அவர்களுடைய கால்களைத் தொழுமரத்தில் மாட்டினான். அவர்களுடைய முதுகுகளில் அடிபட்டுச் சதைப்புண்டு இரத்தம் வடிந்தது. அந்தப் பிலிப்பி பட்டணத்து மக்களுக்குக் கிறிஸ்து இயேசுவின் ஐசுவரியத்தைக் கொண்டுவந்த அந்தப் பிரசங்கிமார்களுக்கு அப்பட்டணத்தார் வழங்கிய கைம்மாறு, அதாவது அவர்களுடைய உழைப்புக்குரிய வெகுமானம் அடியும் உதையும் அவமானமும் இறுதியில் சிறைவாசமுமேயாகும்.

சிறைச்சாலையின் உட்காவலறை இருள்மயமாயிருந்தது. துர்நாற்றம் குளிருமுள்ள இடமாயிருந்தது. ஆயினும் அவர்கள் அசையவில்லை. திடமனதாயிருந்தார்கள். தங்களுடைய காவற்கிடங்கில் அவர்கள் முதற்கண் மௌனமாய் ஜெபம்பண்ணினார்கள் என்று நினைக்கிறேன். பின்ன சிறிது சத்தமாய் ஜெபம்பண்ணத் தொடங்கி முடிவில் உரத்த குரலில் சத்தமிட்டு ஜெபம்பண்ணினார்கள். சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த எல்லாக் காவற்கைதிகளும் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தேவனை நோக்கிய ஏறெடுக்கப்படுகிற ஊக்கமான ஜெபங்கள் மாபெரும் விளைவுகளை உண்டுபண்ணுமல்லவா! அவர்கள் தொடர்ந்து இடைவிடாமல் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தபோது அங்கே சிறைக்கூடத்தில் தேவப்பிரசன்னம் வந்திறங்கியது. சிறைப்பட்டிருந்த உள்ளங்கள் அனல்கொண்டன. அன்பும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தன. அவ்வளவே ஜெபங்கள் ஸ்தோத்திரங்களாக உருவெடுத்தன. அவைகள் இறுதியில் கர்த்தரைத் துதிக்கும் பாடல்களாக மாறின. ஆகவே அவர்கள் பாடத் தொடங்கினர்.

அவ்விரவில் அந்தச் சிறைக்கைதிகள் என்ன பாடல்களைப் பாடினார்களோவென்று நினைக்கும்பொழுது நமக்கு வியப்புத்தான் உண்டாகும். ஒருவேளை அவர்கள் கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன் என்று இருபத்துமூன்றாம் சங்கீதத்தைப் பாடிக்கொண்டிருக்கலாம். அல்லது நான் எக்காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன். அவர் துதி என் வாயிலிருக்கும் கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும் (சங்.34:1-2) என்று பாடிக்கொண்டிருக்கலாம். இருள்மயமான அந்தச் சிறைக்கூடத்தில் ஒருவேளை பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும் ப+ண்டைப்போல் வாடிப்போவார்கள் என்று முப்பத்தேழாம் சங்கீதத்தின் முதலிரண்டு வசனங்கள் ஒலித்துக்கொண்டிருக்கலாம். அவைகளெல்லாவற்றிற்குமேலாக, தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர். ஆகையால் ப+மி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் நாம் பயப்படோம். (சங்.46:1-3) என்று நாற்பத்தாறாம் சங்கீதத்திலிருந்து அவர்கள் பாடிக்கொண்டிருக்கலாம்.

அன்றிரவு அவர்கள் என்ன பாடினார்களோ, நாம் அறியோம். ஆயினும் அவர்களுடைய பாடல்கள் மாபெரும் இன்னிசைக் கீதங்களாயிருந்தன. தேவதூதர்கள் அந்த இன்னிசைப் பாடல்களைக் கேட்டபொழுது சிறைச்சாலைக்கூடத்திலுள்ள சன்னல்களையெல்லாம் திறந்துவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இருளடைந்த பழமையான சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெருவியப்பில் ஆழ்த்தியிருக்கவேண்டும். அவர்களுடைய தோத்திரப்பாடல்கள் தேவனுடைய இதயத்தைப் ப+ரிக்கப்பண்ணியிருக்க வேண்டும். பொதுவாக நெடுங்காலமாய்ச் சிறைப்பட்டிருக்கும் மக்கள் கதறி அழுதுகொண்டுதான் இருப்பார்கள். ஆயினும் இப்பொழுதோ தோத்திரங்களுடன்கூடிய இன்னிசை கீதங்கள் முழங்கின. சிறைக்கைதிகள் யாவரும் என்றுமில்லா இன்பமும் மகிழ்ச்சியுமடைந்திருக்கவேண்டும். அவர்களும் மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்திருக்கவேண்டும்.

இவ்வாறு இன்னிசைக்கானம் சிறைக்கூடத்தின் இருளடைந்த எல்லா அறைகளிலும் ஒலித்துக்கொண்டிருந்தபோது, ஓர் அதிசயம் நடந்தது. தேவனைத் ததிக்கும் துதியின் வல்லமையினால் அப்பழமையான சிறைக்கூடம் குலுங்கத் தொடங்கியது. தாழ்ப்பாள்களெல்லாம் கழன்று எல்லாக் கதவுகளும் திறவுண்டன. உறக்க மயக்கத்திலிருந்த சிறைச்சாலைக்காரன் நடுக்கத்துடன் தன் படுக்கையினின்றும் எழும்பினான். அவனை விளங்கிக்கொள்ளமுடியாத பேரச்சமானது ஆட்கொண்டது.

தன் படுக்கையினின்று குதித்து எழும்பினான். சுற்றுமுற்றும் நோக்கினான். சிறைச்சாலைக் கதவுகளெல்லாம் திறந்திருக்கக் கண்டான். எல்லாச் சிறைக்கைதிகளும் தப்பி ஒடியிருக்கவேண்டுமென்று அவன் உறுதியாய் நம்பினான். அவனுக்கு நேரிட்டுள்ள ஆபத்தை அறிந்துகொண்டான். அவனை எதிர்நோக்கியுள்ள அவமானத்தைச் சந்திக்க அவன் விரும்பவில்லை. ஆகவே தன்னைத்தானே தண்டிக்கும்படி தன் உடைவாளை தன் இடையினின்றும் உருவி, தன்னையே கொலைசெய்யத் தீர்மானித்தான். சிறைச்சாலைக்காரனுடைய உள்ளத்துணிவினை அறிந்துகொண்ட அப்போஸ்தலனாகிய பவுல் சிறைச்சாலைக்காவலனை நோக்கி, சிறைக்காவலனே! நாங்களெல்லாரும் இங்கேதான் இருக்கிறோம். நீ உனக்குக் கேடொன்றும் செய்துகொள்ளாதே என்று சத்தமிட்டுச் சொன்னான்.

பவுலின் அந்த உரத்த குரலில் அன்பும் இரக்கமும் இருந்தது. பவுல் தன்பால் காண்பித்த அன்பை முற்றுமாய் அறிந்துகொள்ளமுடியாவிட்டாலும், அது அவனுடைய உள்ளத்தைத் தொட்டது. இப்பொழுது அவனை மற்றுமோர் அச்சம் ஆட்கொண்டது. நித்தியத்தின் காரியங்களை மெய்யாய் நேரில் காணுமாறு, அங்குகொண்டுவந்த அந்த அப+ர்வமான மனிதர்களின் பிரசன்னத்தினால் உண்டான அச்சம் அவனைப் பற்றிக்கொண்டது. இரத்தக் காயங்களோடும் கிழிந்துபோன உடுப்புக்களோடும் காட்சியளித்த அவர்கள் முன்பாக ஓடோடிவந்து அவர்களுடைய பாதங்களில் விழுந்து, ஆண்டவன்மாரே இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான்.

இப்பொழுது உங்களுக்கும் இது ஒரு பெரும் கேள்விதானா? நாகரீகமிக்க மக்களாயிருப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும்? எனும் கேள்வி ஒரு பெருங் கேள்வியன்று, பெருமதிப்புடையவனாயிருப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்னும் கேள்வி ஒரு மாபெரும் கேள்வியன்று. பெருஞ்செல்வனாவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்பது ஒரு பெருங்கேள்வியன்று. அழகுடையவனாயிருப்பதற்கு, நான் என்ன செய்யவேண்டும்? என்பதும் மாபெரும் கேள்வியன்று. ஆயினும் நம்மில் சிலர் இப்படியுங் கேட்கிறார்கள். இப்படி அவர்கள் கேட்டாலும் அதற்குரிய விடையை அறிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். ஆயினும் நித்திய வாழ்க்கைக்கு ஆதாரமான ஒரே கேள்வி இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்பதே. அதுவே மாபெருங் கேள்வியுமாம்.

இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? விவேகத்தோடு இந்தக் கேள்வியைக் கேட்கும்போது இவ்வினாவில் இலைமறைகாய்போல் மறைந்துகிடக்கிற விடையாகிய மெய்ப்பொருள்தான் என்ன? இரட்சிக்கப்பட்டுள்ள நிலைக்கும் இரட்சிக்கப்படாத நிலைக்குமிடையே காணப்படுகின்ற மாபெரும் மாறுபாட்டினை இக்கேள்வியானது தன்னகத்தே கொண்டுள்ளது. இரட்சிக்கப்பட்டவர்கள், இரட்சிக்கப்படாதவர்கள் என்னும் இரண்டு கூட்டத்தாரை இக்கேள்வியானது வெளிப்படுத்துகிறது. அவர்கள் நாகரீகமுள்ளவர்களும் நாகரீகமற்றவர்களும் அல்லர். கற்றாரும் கல்லாதவருமல்ல, இரட்சிக்கப்பட்டுள்ள தேவனுடைய பிள்ளைகளையும் இரட்சிக்கப்படாத நிலையிலுள்ள தேவனற்ற மக்களையுமே இவ்விரு கூட்டத்தார் என்பதனை இம் மாபெருங் கேள்வி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

கிறிஸ்தவ சமயத்தின் மார்க்கபேத பிரிவினைகளை இன்று நாம் விரும்புகிறதில்லை என்பதனை நன்றாய் அறிந்திருக்கிறேன். ஆயினும் புதிய ஏற்பாட்டின் காலத்திலுள்ள இந்த இருவேறு கூட்டத்தாரை உங்கள் கவனத்துக்கு நான் கொண்டுவர விரும்புகிறேன். இம்மண்ணுலகில் வாழும் மக்கள் அனைவரும் இந்த இரண்டு கூட்டத்திற்குள் அடங்குவார்கள். இரண்டு வாசல்களே உண்டு. ஒன்று பரந்த விரிவான வாசல். மற்றொன்று இடுக்கமான குறுகிய வாசல். இரண்டு அஸ்திபாரங்களே உண்டு. ஒன்று மணலின்மேல் போடப்பட்ட அஸ்திபாரம். மற்றொன்று கற்பாறை மேல் போடப்பட்ட அஸ்திபாரம். நீங்கள் இதை நன்றாய்க் கவனித்துக்கொள்ளுங்கள். நிறைவுடைய மக்கள், குறைவுடைய மக்களன்று பிரிக்காமல், ஜீவனுள்ளவர்கள், ஜீவனில்லாதவர்கள் என்று இருபெருங்கூட்டமாக இயேசு பிரித்துள்ளமை காண்க. குமாரனையுடையவன் ஜீவனையுடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவனில்லாதவன் என்றார் இயேசு. ஆகையால் இரட்சிக்கப்பட்டவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள் அதாவது ஜீவனையுடையவன், ஜீவனில்லாதவன் என்று இரண்டு கூட்டத்தாரே இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பதனை இம் மாபெருங் கேள்வியானது வெளிப்படுத்துகிறது. இதுவே திருமறையானது அங்கீகரிக்கிற மெய்ந்நிலைமையுமாயிருக்கிறது.

இரண்டாவதாக இம்மாபெருங் கேள்வியானது இழப்பினிமித்தமாய் நேரிடும் ஒருவகையான விழிப்பு நிலையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? சிறைச்சாலைக்காரன் அந்தக் கேள்வியைக் கேட்க்கும்போது, அநேக காரியங்களில் அவன் நிச்சயமில்லாதவனாயிருந்தான். இருளிலே வெளியே வருவது எப்படி என்பது குறித்து அவன் நிச்சயமில்லாதவனாயிருந்தான். தான் இரட்சிக்கப்படுவது எப்படி என்பது குறித்து அவன் நிச்சயமில்லாதவனாயிருந்தான். ஆயினும் ஒரு காரியத்தில் அவன் நிச்சயமுள்ளவனாயிருந்தான். தான் காணமற்போனவன் என்பது குறித்துச் சிறைச்சாலைக்காரன் நிச்சயமுள்ளவனாயிருந்தான். இந்த மெய்நிலையை அவன் தட்டிக்கழிக்கமுடியவில்லை. இதனைப் பாராதபடி தன் கண்களை அவன் மூடிக்கொள்ளவில்லை. எப்படியாயினும் இதனை மறுக்கவேண்டும் என்று அவன் முற்படவில்லை.

இப்பொழுதும் நீ இங்கே தேவனற்ற நிலைமையில் இருப்பாயின் நீ அதனை மறுக்கமாட்டாயென்று நான் நம்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உனது சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீ காணாமற்போனவன்தான். ஆனபடியால் இரட்சிக்கப்படும் வழிமுறையில் காணாமற்போயிருக்கிற உன்னுடைய நிலைமையை நீ அறிந்துகொள்வதுதான் முதற்படியாயிருக்கிறது. அதுவே நீ செய்யத்தக்க மேன்மையான காரியமுமாகும். தான் நோய்வாய்ப்பட்டுள்ளதை ஒருவன் உணராத மட்டும் அவன் வைத்தியனை நாடமாட்டான். தன்னுடைய அறியாமையை கண்டறியுமட்டும், கற்றுக்கொள்ளும்படி முயலமாட்டான். அவ்வண்ணமே தான் காணமற்போனவன் என்று அவன் அறிந்துணருமட்டும் இரட்சிப்புக்காக அவன் தேவனிடம் திரும்பிவரமாட்டான். தன்னை அறிவது மெய்யறிவு. அவ்வாறு அறிந்துகொள்ளும் நாள் தான் ஒரு மனிதனுக்கு நன்னாளாகும். தேவன் தன்னைக் காண்கிறவாறு அவன் சற்றேனும் கண்டுகொள்வானாயின், அந்நாள் அவனுக்குப் பெருநாளாகும். தன் குற்றம் உணர்ந்து, தேவசமுகத்தில் அவன் தாழ்ந்து பணிந்து தலைவணங்கி, பாவியாகிய என்மேல் தேவனே, கிருபையாயிரும் என்று அறிக்கையிடும் அவ்வேளைதான் அவனுக்கு மங்களகரமான சுபவேளையாகும்.

மூன்றாவதாக இம்மாபெருங்கேள்வியானது, அதனைக் கேட்ட காணமற்போன மனிதனையும், இரட்சிக்கப்படுவதற்குரிய அவனது நல்வாய்ப்பினையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? தேவனைவிட்டுப் பிரிந்து தூரமாய்க் காணாமற்போயிருக்கிற தன் நிலைமையைக் குறித்தும், அச்சுறுத்துவதும், கறைப்படுவதும், குற்றப்படுத்துவதுமாகிய தன்னுடைய பாவத்தைக்குறித்தும் வழிப்புணர்வுடையவனாகிய ஒரு மனிதனை நாம் இங்கு காண்கிறோம். ஆயினும் அவனோ விசுவாசிக்கிறான். தான் இரட்சிக்க்ப்படக்கூடும் என்றும் அவன் விசுவாசிக்கிறான். இத்தகைய இரட்சிப்பொன்று இருக்கிறது. அதனைப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு இருக்கிறது.

நீ ஒரு பாவியாயிருக்கிறாய் என்று நீ உணர்ந்துகொண்டால் மாத்திரம் போதாது. அதனால் நன்மையொன்றுமில்லை. நீ இரட்சிக்கப்பட முடியும் என்றும் நீ விசுவாசிக்கவேண்டும். நீ பெலவீனம் என்று உணர்ந்துகொண்டால் மட்டும் போதாது. பெலமுள்ளவனாகக்கூடும் என்றும் நீ விசுவாசிக்கவேண்டும். காற்றில் அசைந்தாடும் நாணலைப் போன்றிருந்த சீமோன் கற்பாறையான பேதுருவாக மாற்றியமைக்கப்படமுடியும் என்று நீ விசுவாசிக்கவேண்டும். மக்களை மாற்றியமைக்கிற தேவனுடைய வல்லமையில் நீங்கள் விசுவாசங்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இந்த மாபெருங்கேள்வியானது உங்களுக்கு மையிருள் படிந்த ஏமாற்றத்திந்கும் மனக்கசப்புக்குமேதுவான ஒரு கேள்வியாகத்தான் தீரும்.

நாலாவதாக இந்த மாபெருங் கேள்வியானது இரட்சிக்கப்படவேண்டுமென்னும் வாஞ்சையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வருங்காலத்தில் இது குறித்து விவாதிக்கவேண்டமென்னும் நோக்கத்துடன் தகவல் சேர்க்கும்படி சிறைச்சாலைக்காரன் இக்கேள்வியைக் கேட்கவில்லை. உலகத்தாரைப்போல் அவன் ஆதாய நோக்கமுடையவனல்லன். விளையாட்டுக்காரனும், கேலி கிண்டல் செய்கிறவனுமல்லன். ஆராய்ந்து அறிந்துகொள்ளும் அவாவுடையவனாகவும் அவன் அக்கேள்வியைக் கேட்கவில்லை. இரட்சிக்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அறிந்துகொள்ளும்பொருட்டே அவன் இக்கேள்வியைக் கேட்டான். இரட்சிக்கப்படுதற்குரிய நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டுமென்னும் உண்மையான நோக்கத்துடன்தான் அவன் இக்கேள்வியைக் கேட்டான்.

ஐந்தாவதாக, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்குரிய வாய்ப்புளதென்றாலும் அதனைப் பெற்றுக்கொள்ளும்படி நீங்கள் சில காரியங்களைச் செய்யவேண்டுமென்பதனையும் இம் மாபெருங்கேள்வியானது தன்னகத்தே கொண்டுள்ளது. இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? எத்தகைய விடையை நீ எதிர்பார்க்கிறாய்? அதற்கு அப்போஸ்தலன் என்ன சொன்னார்? ஒன்றுஞ்செய்ய வேண்டாம் என்று அவர் சொன்னாரா? அக்காரியத்தை விட்டுவிடு. அதை மறந்துவிடு. போகிற போக்கில் போ. என்று அவர் சொன்னாரா? ஏதோ ஒரு காரியத்தைச் செய்யவேண்டுமென்று அப்போஸ்தலன் சிறைச்சாலைக்காரனிடம் சொன்னார். ஆகவே நீங்களும் நானும் அறிந்திருக்கிறதுபோலவே இரட்சிக்கப்படும்படி தானும் ஏதோ ஒரு காரியம் செய்யத்தான் வேண்டுமென்று சிறைச்சாலைக்காரனும் அறிந்திருந்தான்.

அதனை நாமெல்லாரும் அறிந்திருந்தாலும், அதுவே மெய்யானது என்று சொல்லி அதனைச் செய்கிறவர்கள் நம்மில் மிகமிகச் சிலரேயாவர். விபத்தினால் இடர்ப்படும்போது தடுத்தாட்கொள்ளப்படுவதுதான் இரட்சிப்பு என்று நினைக்கிறோம். நம்மைப் பொருத்தமட்டில் எத்தகைய முயற்சியுமின்றி நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதான ஒன்று தான் இரட்சிப்பு என்று நினைக்கிறோம். நாம் உறங்கும்போது நம்மையுமறியாமல் நம்முடைய சட்டைப் பையில் போடப்படுவதும் அல்லது மரிக்கும்போது நம்முடைய சவப்பெட்டியில் போடப்படுவதுமாகிய ஒன்றுதான் இரட்சிப்பு என்று எண்ணிக்கொண்டு நாம் செயல்ப்படுகிறோம். நான் இரட்சிக்கப்படும்படி என்ன செய்யவேண்டும்? விவேகத்தோடு இந்தக் கேள்வியைக் கேட்டுப்பார். அப்பொழுது ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டுமென்பதனை நீ உணர்ந்துகொள்வாய்.

அடுத்தபடியாக இந்த மாபெருங் கேள்வியிலுள்ள இரட்சிப்புக்கேதுவான நிபந்தனைகள் நம்முடைய விருப்பத்துக்குரியவைகளல்ல. இரட்சிக்கப்படும்படி என்ன செய்யவேண்டுமென்பது குறித்து முடிவுசெய்வது உனக்கோ அன்றி எனக்கோ அடுத்ததன்று. இரட்சிப்பை நீ எற்றுக்கொள்ளலாம். அல்லது வேண்டாமென்று தள்ளிவிடலாம். அதன் நிபந்தனைகளை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது மறுக்கவேண்டும். இரட்சிக்கப்படுதற்கேதுவான நிபந்தனைகளைக் குறித்து நீயோ முடிவுசெய்யமுடியாது. நீ இரட்சிக்கப்படவேண்டுமாயின் யாதொரு நிபந்தனையுமின்றி நீயே உன்னை ஒப்புக்கொடுக்கவேண்டும்.

ஆகையால் இரட்சிக்கப்படும்படி நான் என்ன செய்யவேண்டும்? என்னும் இம்மாபெருங் கேள்வியானது, இரட்சிப்பைக் கண்டடையுமாறு நம்முடைய விருப்பத்திற்கோ அன்றி மதிப்பிற்கோ, அன்றிப் பாராட்டிற்கோ உரியதன்று. நீயோ நானோ தெரிந்துகொள்ளும் நிபந்தனைகளுமல்ல. தேவன்தாமே அதனை நியமித்துள்ளார். அதனை நீயோ நானோ மாற்றமுடியாது. ஆகையால் இரட்சிக்கப்படவேண்டுமென்று நீ விரும்பினால், நீ செய்யத்தான் வேண்டும் என்றுமாறுள்ள ஒரு காரியமுண்டு.

இறுதியாக இம்மாபெருங்கேள்வியானது. இரட்சிப்பானது தனிப்பட்டமுறையில் ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள காரியமாகுமென்பதனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. நான் என்ன செய்யவேண்டும்? தேவன் என்ன செய்யவேண்டுமென்பது ஈண்டுக் கேள்வியன்று. அகில உலகமும் இரட்சிப்படையும்படி தேவன் வேண்டிய ஏற்பாடுகளை செய்துமுடித்துவிட்டார். ஆகையால் திருச்சபையானது செய்யும்படி அதற்கு ஒன்றுமில்லை. சபையின் போதகர் செய்வதற்கென்றும் இங்கு ஒன்றுமில்லை. அதுபோலவே எனக்கு முன்னோ அன்றிப் பின்னோ இருக்கிற மனிதன் செய்யுமாறுள்ள ஒன்றுமல்ல. இரட்சிக்கப்படும்படிக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்னும் இம்மாபெருங்கேள்வியானது என்னுடைய இதயத்தை நோக்கி வருகிறது.

இரட்சிக்கப்படும்படி நான் என்ன செய்யவேண்டும்? நீ செய்யுமாறுள்ள ஒரு காரியமுண்டு. இரட்சிப்புக்கள் நடத்தாததும், செய்கிறதுமான பல காரியங்கள் உண்டு. இரட்சிக்கப்படும்படி, நீ விரும்பினால் முதற்கட்டத்தில் உன்னுடைய நல்ல செய்கைகள், தானதருமங்கள், புண்ணியங்களை நீ சார்ந்துகொள்ளக்கூடாது. நம்முடைய நீதியின் கிரியைகளெல்லாம் அழுக்கான கந்தைகளேயன்றி வேறல்ல. உன்னுடைய நற்பண்புடைமையையும் நீ சார்ந்துகொள்ளக்கூடாது. அவ்வாறு எந்த மனிதனும் இரட்சிக்கப்பட்டதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் சுவிசேஷக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வாலிபன் என்னைச் சந்தித்து, இயேசு கிறிஸ்துவின்றியே தான் நல்லவனாயிருப்பதாகச் சொன்னான். மெய்யாகவே அவன் இரட்சிக்கப்படவில்லை. அத்தகைய ஒரு மனிதன் கிறிஸ்து இயேசுவை நோக்கி, என்னுடைய காரியத்தைக்குறித்து நீர் அறிந்துகொள்ளவில்லை. என்னை பொருத்தமட்டில் கல்வாரித் தியாகமானது வீணும் விரையமுமான ஒன்றாகும் என்று சொல்லுவதாகத்தான் அமையும்.

மற்றொருவனுடைய பொல்லாப்பினைப் பார்த்துக் கொண்டு அவனைப்போல் நானில்லை என்று எண்ணிக்கொண்டிருக்குமட்டும் நீ இரட்சிக்கப்படமுடியாது. இப்பொழுது நான் பேசிக்கொண்டிருக்கும் நிலையில்தானே, நீங்கள் உங்களுக்குள்ளே என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதனை நான் அறிகிறேன். அந்த மகாப் பழமையான பொய்களில் ஒன்றைத்தான் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். கிறிஸ்தவனாக வேண்டுமென்று நான் விரும்புகிறேன் ஆயினும் தேவனுடைய திருச்சபையில் எத்தனையெத்தனை மாயக்காரார்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுகிறீர்கள். எத்தனை எத்தனை காரணங்காட்டித் தப்பிக்கொள்ளமுடியும். ஆயினும் இரட்சிக்கப்படாமைக்கு அது காரணமன்று. இவ்வாறு காரணங்காட்டி இரட்சிக்கப்பட்டுள்ள ஒரு மனிதனை நான் கண்டறியேன். தனிப்பட்ட என்னுடைய இரட்சிப்புக்காக என்னுடைய சகோதரனுடைய குறைகளையும் குற்றங்களையும் சுட்டிக்காண்பிப்பதும் அவைகளைச் சார்ந்துகொள்ளுவதும் மகா மகா அற்பக்காரியமாகும்.

இரட்சிக்கப்படும்படி ஓர் எளிய முறையைக் கைக்கொள்ளலாமோவெனில் அதும் மூடாத காரியமேயாகும். உன்னுடைய ஆண்மைத் தன்மையும் கோழைத்தன்மையையும் சார்ந்துகொண்டு நீ இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெக்சாஸ் நகரில் ஓர் எழுப்புதல் கூட்டத்தை நடத்தினேன். ஒருநாள் கூட்டத்தின் இறுதி வேளையில் ஒரு பெண் என்னிடத்திற்கு வந்து, என் கைகளைக் குலுக்கினாள். அவ்வாறு என் கைகளைக் குலுக்கிக்கொண்டே நான் ஒரு கிறிஸ்தவளாகப்போகிறேன் என்றாள். அவளுடைய முடிவுக்காக நான் அவளைப் பாராட்டினேன். அவளோ மேலும் தொடர்ந்து இப்பொழுதன்று சீக்கிரத்தில் நான் கிறிஸ்தவளாகப் போகிறேன் என்றாள்.

மேலும் தொடர்ந்து பாருங்கள் சில நாட்களில் நான் என் உறவினர் வாழ்கிற கிராமப்பகுதிக்கச் செல்வேன். அங்கேயும் இவ்விதமான எழுப்புதல் கூட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கே என்னை ஒருவரும் அறியமாட்டார்கள். ஆகையால் அங்கே இரட்சிக்கப்படுவது மிகவும் எளிதாகும். இங்கே இந்த டெக்சாஸ் நகரில் எல்லாரும் என்னை அறிந்திருக்கிறார்கள். இவர்கள் நடுவே இயேசுவை என்னுடைய சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளுதற்குரிய தைரியம் எனக்கில்லை என்று சொன்னாள். திட்டமிட்டபடியே அம்மங்கை நல்லாள் கிராமப்பகுதிக்குச் சென்றாள். ஆயினும் அவளோ இரட்சிக்கப்படவில்லை. ஆம், நிச்சயமாய் அவள் இரட்சிக்கப்பட முடியாது. தன்னுடைய பெருமைக்கு அல்லது கோழைத்தன்மைக்கு இடங்கொடுத்துக்கொண்டே ஒருவன் இரட்சிப்படைய விரும்பினால் அது ஒருபோதும் கூடாது.

இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? இம்மாபெரும் கேள்விக்கு ஒரு விடையுண்டு. அவ்விடையானது நாம் முற்றாய் நம்பிச் சார்ந்துகொள்ளத்தக்க விடையாயிருக்கிறது. இவ்வுலகத்தில் இம்மாபெருங் கேள்விக்கு அதுவே சரியான விடையென்று முழுநிச்சயமாயிருக்கிறேன். இப்பொழுது நான் உயிரோடிருக்கிறேன் என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்விடையும் அவ்வளவு நிச்சயமாயிருக்கிறது. இப்பொழுதும் நான் தேவனுடைய மனிதனாயிருக்கிறேன் என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாயிருக்கிறது அவ்விடையும்.

அவ்விடையை அறிந்துகொள்ளும்படி நீ மிகவும் ஆவலாயிருக்கிறாயென்று நான் எண்ணுவேனாயின், அதில் வியப்புறுதற்கொன்றுமில்லை. உன்னுடைய மாபெருங் கேள்விக்குரிய விடை இதுதான் என்று நினைவிற்கொள்க. இவ்வுலகின்கண் கேட்கப்பட்டுள்ள மிகமிக இன்றியமையாத கேள்விக்குரிய விடை இதுதான். இந்த விடையை அறிந்துகொள்ளும்படி உன் இதயம் துடிதுடிக்கிறதல்லவா? இது உன்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிற உறக்கமயக்கத்தையும் சோம்பலையும் ஓட்டுகிறதல்லவா? ஆம், இது நிச்சயமாக ஓட்டும். நான் இப்பொழுது சொல்லப்போகிற இவ்விடையானது பகற்கனவு காண்கிறவனோ சொப்பனக்காரனோ சொல்லும் ஒரு விடையாகாது. மாறாக கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பட்டறிவினால் சோதித்து அறிந்துகொண்டிருப்பதும், தேவனுடைய ஆவியானவரால் ஏவப்பட்டு நான் சொல்லுகிறதுமான விடையாயிருக்கிறது. ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? விடை: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது என்றால் என்ன? உரிமையோடு தாம் செய்யக்கூடும் என்று சொல்லுகிற கர்த்தராகிய இயேசுவின் எல்லாச் செயல்களையும், செய்வதாக அவர் வாக்குப்பண்ணியுள்ள எல்லாவற்றையும் விசுவாசிப்பதும் அதற்காக நாம் அவரைச் சார்ந்துகொள்வதுமே விசுவாசமாகும். மூடி பிரசங்கியார் இவ்வாறு சொல்லுவார். ஒருசமயம் மூடி தம்முடைய வீட்டின் நிலவறையில் இருந்தார். அங்கிருந்தவண்ணம் அவர் மேலேநோக்கிப் பார்த்தபொழுது தம்மை பார்க்கும்படி முயன்றுகொண்டிருந்த தன்னுடைய சிறுமகளைக் கண்டார். நிலவறையில் அவருடைய சிறுமகள் பார்க்கமுடியவில்லை. அப்பொழுது மூடி தம் மகளைப் பார்த்து, மகளே, நீ குதி. அப்பா உன்னைப் பிடித்துக்கொள்வேன் என்றார். உடனடியாகத்தானே அச்சிறுமகள் குதித்துவிட்டாள். ஆம். அதுதான் விசுவாசம். அதாவது தகப்பனார்மேல் கொண்டிருந்த அந்தச் சிறுமகளின் நம்பிக்கைதான் விசுவாசமாகும். ஆம், சிறைச்சாலைக்காரனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தான். இரட்சிப்புக்காக அங்கே அப்பொழுதே அவரை விசுவாசித்தான்.

என்ன நேரிட்டது? சிறைச்சாலைக்காரன் இரட்சிக்கப்பட்டான். அக்கணமே அந்த மனிதனுடைய இருதயத்திற்குள் கிறிஸ்து இயேசு வந்துவிட்டார். அவன் ஒரு புதிய சிருஷ்டியாக மாறிவிட்டான். ஒரு புதுமையான மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது. அன்புடன் கூடிய ஒருவகையான கனிவு அவனைப் பிடித்துக்கொண்டது.

சிறைச்சாலைக்காரன் என்ன செய்தான் என்பதனை நீ கண்டாயா? தண்ணீர்கொண்டுவந்து அவன் இரண்டு பிரசங்கிமார்களுடைய காயங்களையும் கழுவினான். முன்னால் இரவு பவுலும் சீலாவும் சிறைச்சாலைக்குள் வந்துற்றபொழுது சிறைச்சாலைக்காரன் அவர்களுடைய உடலின் காயங்களைக் குறித்துச் சற்றேனும் கவலைப்படவில்லை. ஆயினும் இப்பொழுதோ, அவன் இயேசுவைத் தன் வாழ்க்கையில் கண்டுகொண்டான். அவருடைய திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவனானான். ஒரு புதிய அன்பு அவனுக்குள் வந்துவிட்டது. முன்னே கொடுமைக்காரனாயிருந்த அவன் இப்பொழுது அன்புடன்கூடிய கனிவுள்ளம் படைத்தவனானான். ஆம், இவ்வாறுதான் இயேசு கிறிஸ்துவின் வல்லமையானதும் மனுமக்களை மாற்றி மறுரூபமாக்குகிறது.

இப்பொழுது ஒரு கேள்வி! இரட்சிக்கப்படும்படி நீ விரும்புகிறாயா? நீ விரும்பினால் இரட்சிக்கப்படுவாய். இவ்வுலகத்தில் இது மிகமிக நிச்சயமான ஒன்றாகும். பகலைத் தொடர்ந்துவருகிற இரவைப்போல இதுவும் நிச்சயமாகும். கோதுமையை விதைத்து, பின்னர் அக் கோதுமையை அறுவடைசெய்வது எவ்வளவு நிச்சயமோ, அவ்வண்ணமே இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பும் அவ்வளவு அதிநிச்சயமாயிருக்கிறது. நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது, நீ இரட்சிக்கப்படுவதும் அவ்வளவு அதிநிச்சயமாயிருக்கிறது. இப்பொழுதே அதனைச் சோதித்துப்பார். அப்பொழுது உன்னுடைய வாழ்க்கையில் இந்த நல்ல அனுபவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவாய்.

 http://www.tamilchristianassembly.com/apg16/