சகோதரி நடிகை நக்மா கிறிஸ்தவளாக மாறியது ஏன்?






ஏசு தான் எனக்கு சூப்பர் ஸ்டார் - நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்




நடிகை நக்மா கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். சென்னையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் அவர் பேசினார். ``தற்கொலை உணர்வில் இருந்து ஏசு என்னை காப்பாற்றினார்'' என்று அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி பட உலகிலும் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர், நக்மா. சினிமாவில், `மார்க்கெட்' இழந்ததும் சில காலம் அரசியலில் இருந்தார். பின்னர் அரசியலை விட்டு ஒதுங்கினார்.

பெங்களூரில் உள்ள `வாழும் கலை' என்ற அமைப்பில் சேர்ந்தார். சில வருடங்கள் அந்த அமைப்புக்காக பணியாற்றினார். பின்னர் அந்த அமைப்பில் இருந்தும் அவர் விலகிவிட்டார்.

இப்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டார். ஊர் ஊராக சென்று கிறிஸ்தவ மத கூட்டங்களில் பேச அவர் முடிவு செய்து இருக்கிறார்.

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ், திரையுலகினருக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நக்மா `பைபிள்' பிரசங்கம் செய்து, கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்தினார்.

ஒவ்வொரு அத்தியாயத்தில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி பேசி, அனைவரையும் வியக்க வைத்தார். அவர் பேசியதாவது:-

``நான் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் `சூப்பர்ஸ்டார்' நடிகர்களுடன் நடித்து விட்டேன். ஆனால் எனது உண்மையான சூப்பர்ஸ்டார் ஏசுதான்.

அரசியலில் சில காலம் இருந்தேன். அப்போது எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. நிம்மதி இழந்து தவித்தேன். அழுதேன். தற்கொலை உணர்வுகளும் வந்து போனது. அந்த நேரம் `பைபிள்' என் கைக்கு கிடைத்தது. படித்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாக என்னை அழுத்திய துக்கங்கள் விலகின. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மனமெங்கும் பரவின.

எனக்கு இப்போது அம்மா, அப்பா, சொந்தபந்தம் எல்லாமே `பைபிள்'தான். நான் கர்த்தரின் மகள். ஏசு, என் வாயில் இருந்து பிரசங்கம் செய்கிறார். தேவன் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.

எனக்கு இனி கர்த்தர்தான் உலகம். அவருக்காக ஊழியம் செய்யப்போகிறேன்.''

இவ்வாறு நக்மா பேசினார். தொடர்ந்து அவர், `பைபிள்' வாசகங்களை சொல்லி பிரசங்கம் செய்தார்.

'ஏசுவின் இரண்டாம் வருகை' நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்" என்றார் நக்மா.