முதலாவது, நீங்கள் உங்களது உண்மையான நிலையை உணரவேண்டும். இருவர் தேவாலயத்திற்கு ஜெபிக்கச் சென்றனர். ஒருவன் தன்னைத் தாழ்த்தாமல் தேவ சமூகத்தில் தன்னை உயர்த்தினான். பிறரையும் குறைவாக எண்ணினான். அவனது ஜெபமோ அலங்கார வார்த்தைகளால் நிறைந்திருந்தது. அடுத்தவன் அப்படியல்ல. 'அவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்." முதலாமனவல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டு தன் வீட்டுக்குத் திரும்பினான் என்று இயேசு உவமையாகச் சொன்னார்.
நம்மை நல்லவர்களென்று நினைக்கத் தூண்டும் நமது சில நற்குணங்களும் நற்செயல்களுமே நமது இரட்சிப்புக்குப் பெருந்தடையாய் அமைந்துவிடுகின்றன. தீர்க்கன் ஏசாயா இதை நன்றாய் விவரிக்கிறான். 'நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்: எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது: நாங்கள் அனைவரும் இலைகளைப்போல உதிருகிறோம்: எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டு போகிறது."
ஒருவேளை வெளிப்படையான துர்க்குணங்கள் அல்லது தீய நடத்தைகள் நம்மிடம் காணப்படால் இருக்கலாம். ஆனால் பரிசுத்தராகிய தேவனுக்கு முன்பாக நீதிமான் ஒருவனுமில்லை. எல்லாரும் பாவம்செய்து தேவமகிமையை இழந்துவிட்டோம். நான் பாவம் செய்யவில்லை. எனக்கும் பாவம் ஒன்றுமில்லை என்று சொல்லுகிறவன், தேவனையோ, தேவஊழியனையோ அல்ல, தன்னையே ஏமாற்றுகிறான் என்று வேதம் சொல்லுகிறது.
இரண்டாவது, உங்கள் பாவத்திற்கும் பரிகாரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் என்று விசுவாசித்து அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.
பாவம் செய்ததால் நாம் தேவனுக்கு விரோதிகளானோம். நமக்கும் தேவனுக்குமிடையில் சமாதானத்தை உண்டாக்க இயேசு கிறிஸ்து நடுவராக வந்தார். நம்மை மீட்பதற்காக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுத்தார். கல்வாரியின் கோரத்தை சிலுவையில் நமது பாவங்களைச் சுமந்து, நமது அக்கிரமத்திற்காகத் தண்டிக்கப்பட்டார். மாசற்ற அவரது இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்.
நண்பரே! உங்களுக்காகவே இயேசு சிலுவைக்குச் சென்றார் என்று விசுவாசியுங்கள். சிலுவைக் கள்ளன் அவரை விசுவாசித்தபோது அற்புதமாய்ப் பெற்ற மன்னிப்பை நினைவிற்கொள்ளுங்கள்.
நான் இரட்சிக்கப்பட எனன செய்யவேண்டும் என்று நடுநடுங்கி சிறைச்சாலைக்காரன் ஒருவன் தேவ ஊழியனிடம் புகலடைந்தான். 'கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி" என்ற உடனடிப்பதிலை விசுவாசித்தது அவனுக்கும் அவன் வீட்டாருக்கும் இரட்சிப்பின் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது.
இரட்சிப்பு ஓர் அதிசயம்! முந்திய வினாடி பாவி! விசுவாசித்ததால் அடுத்த வினாடியே நீதிமான். முந்திய வினாடி இருள்: அடுத்த வினாடி மகிமையான ஒளி! முந்திய வினாடி பிசாசின் பிள்ளை: அடுத்த வினாடி தேவனுடைய பிள்ளை! அற்புதங்களிலெல்லாம் அற்புதமாம் இந்த இரட்சிப்பு கிட்டுவது எளிய விசுவாசத்தினாலேயே.
'இயேசு கிறிஸ்துவின் நமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்"
மூன்றாவது, உங்கள் இருதயம் விசுவாசத்தை வாயினால் அறிக்கையிடவேண்டும்.
பவுல் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் இதைத் தெளியாககுறிப்பிட்டுள்ளார். 'கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்iகியட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழும்பினரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்"
இந்த வாயின் அறிக்கைக்கும் தேவனுக்குக் கீழ்ப்படிதலுக்கும் அடையாளமாகத்தான் ஞானஸ்நானம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மனந்திரும்பி தேவனே நீதிபரர் என்று அறிக்கையிட்டவர்களுக்கு யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தான். மனந்திரும்பி வசனத்தை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்களுக்கு சீஷர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். 'விசுவாசமுள்ளுவனாகிய ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்" என்பது இயேசுவின் தெளிவான உபதேசம்.
பிரியமானவர்களே, தேவம் கூறும் இவ்வழியின்றி வேறுவழியில் நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. நமது மார்க்கச் சடங்குகளும், புண்ணியச் செயல்களும் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாதவை. 'தேவனே என்னில் நன்மை ஒன்றுpல்லை: நான் ஒரு பாவி;: எனமேல் கிருபையாயிரும்: உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எனது பாவப் பரிகாரியாகவும் இரட்சகராகவும் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறேன். எனது விசுவாசத்தை அறிக்கையிட்டு உமக்குக் கீழ்ப்படிகிறேன். ஆமென்." இதுவே இரட்சிப்பின் வழி.
source:http://www.tamilgospel.com/glaube1.htm