ஆசிரியர்: சைலஸ்
யோவான் 13:34,35 ல் வேதம் சொல்லுகிறது :
"நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில்; அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்." [1]
குர்ஆன் 8:63 அல்-அன்பஃல் (கொள்ளைப் பொருட்கள்)
மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். [2]
பகுதி 1: முஹம்மதுவின் ஆஸ்தி
பாத்திமா, அலி மற்றும் இப்னு அப்பாஸ்
முன்னுரை
முஹம்மது தன்னுடைய மார்க்கத்தை பரப்புவதில் தான் மாத்திரம் தனிமையாக இருந்து செய்யவில்லை. அவர் மெக்காவை தாக்கி கைப்பற்றின சமயத்தில் அவரோடு கூட ஒரு விசுவாசமுள்ள குடும்பமும் மற்றும் ஆயிரக்கணக்கில் விசுவாசமான தோழர்களும் இருந்தனர். அவருடைய பின்னடியார்கள் அவருக்காக கொலைசெய்வதற்கும், மரிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதை கவனிக்க வேண்டும். அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளையும் பற்றிக் கொண்டவர்களாக, அவருடைய கட்டளைகளை கண்டிப்புடன் பின்பற்றினவர்களாக இருந்தனர். மேலும் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தங்களால் முடிந்த அளவிற்கு குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர்.
பிரசித்தி பெற்ற மற்ற எல்லாத் தலைவர்களைப் போலவே, முஹம்மதுவும் தன்னைச் சுற்றி தன்னுடைய நெருங்கிய சிறந்த நண்பர்களையும் குடும்ப அங்கத்தினர்களையும் கொண்டிருந்தார். முஹம்மது தன்னுடைய மனைவியாகிய ஆயிஷாவை அதிகமாக நேசித்தார். (ஆயிஷா அவர்கள் 9 வயதாக இருக்கும் போது அவர்களைத் திருமணம் செய்து கொண்டார், ஆயிஷா அவர்கள் 18 வயதாக இருக்கும் பொழுது முஹம்மது மரித்துப் போனார்). ஆயிஷா அவர்களுக்கு அடுத்தபடியாக, முஹம்மது தன்னுடைய மாமனாராகிய அபூபக்கரை அதிகம் நேசித்தார், அதன் பின் தன்னுடைய வலிமையான தோழர் உமரை அதிகமாகநேசித்தார். இவர்களைத் தவிர மற்ற "தோழர்களைக்" காட்டிலும் அவருக்கு நெருக்கமான சிறப்பு நண்பர்களும், குடும்ப அங்கத்தினர்களும் முஹம்மதுவிற்கு இருந்தனர். இந்த சிறப்பு நண்பர்களில் பெரும்பான்மையானோர் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏதாவது ஒரு விதத்தில் முக்கியமான தலைவர்களாக மாறினார்கள்.
மேற்கண்ட விசேஷித்த மக்கள் குழுவைத் தான் "அரச குடும்பம் (Royal Family) " என்று நான் அழைக்கின்றேன். அவர்கள், இங்கிலாந்து ராணி எவ்வித அரச உரிமைகளோடு கருதப்படுகிறார்களோ அவ்வண்ணமாக இவர்கள் கருதப்பட்டிருக்கவில்லை. ஆனால் இந்த மக்கள் முஹம்மதுவை மிகவும் நெருக்கமாக அறிந்திருந்தார்கள் மேலும் இஸ்லாமிய அரசியல் மற்றும் சரித்திரத்திலும் இறையியலிலும் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தனர். எனவே "அரச குடும்பம்" என்ற பெயர் ஓரளவிற்கு இவர்களுக்கு பொருந்துகிறது. இவர்கள் முஹம்மதுவை சிறந்த முறையில் அறிந்திருந்தார்கள் அவரும் இவர்களை சிறந்த முறையில் அறிந்து வைத்திருந்தார். இவர்கள் முஹம்மதுவை நேசித்தார்கள் அவரும் இவர்களை நேசித்தார். அவருடைய போதனைகளை இவர்கள் அறிந்திருந்தார்கள் மனனம் செய்து வைத்திருந்தார்கள், வாழ்க்கையில் அனைத்துப் பகுதிகளிலும் இவர்கள் முஹம்மதுவை துல்லியமாக பின்பற்ற முயற்சி எடுத்தார்கள். முஹம்மதுவுடன் இவர்களுக்கு இருந்த நெருக்கமான உறவின் காரணமாக அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்கு கற்றுக் கொடுக்கவும் வழிநடத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
இதைப் போலவே, இயேசுவின் சீடர்களும் இயேசுவை அறிந்திருந்தார்கள், அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படியவும் அவரோடு தங்களுக்கு இருந்த தனிப்பட்ட உறவின் மூலம் தாங்கள் அறிந்திருந்தவற்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் பிரயாசப்பட்டார்கள்.
நான் "இஸ்லாமின் அரச குடும்பம்" என்ற தலைப்பில் தொடர்ச்சியான கட்டுரைகளை அளிக்கின்றேன். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு அவர்கள் நடந்துக் கொண்ட விதத்தை ஆராய்வோம். "உண்மை இஸ்லாம்" பற்றிய ஒரு சரியான மற்றும் நியாயமான மதீப்பீடாக இந்த ஆய்வு இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையை சொல்லவேண்டுமென்றால், இந்த முஸ்லிம்கள் தான் "இஸ்லாமின் சிறந்த முஸ்லிம்களாவார்கள் ". இவர்கள் இஸ்லாமின் அஸ்திபாரங்களாவார்கள் ஏனென்றால் ஸஹீஹ் ஹதீஸ்களில் பெரும்பான்மை சதவீதமான அறிவிப்பாளர்களாக இவர்கள் இருக்கின்றனர் மேலும் இவர்களில் சிலர் இஸ்லாமிய ஆட்சியில் ஆளுகை செய்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் இவர்களில் ஒருவர், சொந்தமாக குர்ஆனை தொகுத்தவராகவும் இருக்கிறார்"முஹம்மதுவையும் அவரது கட்டளைகளையும் துல்லியமாக அறிந்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள்" என்று நாம் ஒரு குழுவை குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், அந்த குழு இவர்களாகத் தான் இருக்கமுடியும்.
"நீங்கள் மரத்தை அதின் கனிகளால் அறிவீர்கள்" என்று இயேசு சொன்னார். இந்த சிறந்த முஸ்லீம்களின் கனிகளினால் (நடத்தைகளினால்) இஸ்லாமின் நற்பண்பை நாம் தீர்மானிப்பது நிச்சயமாக ஒரு மிகையான செயல் அல்ல. முஹம்மது மற்றும் இஸ்லாமின் பெரிய தாக்கம் அவரைச் சுற்றிலும் கிட்டத்தட்ட 24 மணி நேரமும் இருந்தவர்களாகிய இவர்கள் மீது இருக்காதா என்ன?
ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அவருடைய மரணத்திற்கு பிறகு அவர்கள் திருச்சபையின் தலைவர்களானார்கள், ஒன்றாக வாழ்ந்தார்கள், அடுத்தவர்களுடைய துன்பத்தில் பங்கு கொண்டார்கள். ஒருவரையொருவர் விசாரித்துக் கொண்டார்கள், இன்னும் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இயேசுவில் அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தின் காரணமாக, அவரைப் பற்றி அவர்கள் நெருக்கமாக அறிந்திருந்த அறிவினிமித்தம், அவருக்கு அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பின் காரணமாக மரணத்தருவாய் வரை அவர்கள் அவருக்கு கீழ்படிந்திருந்தார்கள்.
முஹம்மதுவும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று தன்னுடைய பின்னடியார்களுக்கு கட்டளையிட்டார். அவருடைய பின்னடியார்கள் முஹம்மது எப்படி உடை உடுத்தினாரோ, எப்படி சாப்பிட்டாரோ, எப்படித் தொழுகை செய்தாரோ அப்படியெல்லாம் அவரைப் பின்பற்றி செய்வதற்கு கவனமாக இருந்தார்கள். அவருடைய மரணத்திற்கு பிறகு முஹம்மதுவுடைய பின்னடியார்கள் எப்படி தங்களுடைய விசுவாசத்தையும் கீழ்படிதலையும் கொண்டிருந்தார்கள்? வெளிப்புறமான தோற்றத்தையும் வெறுமையான பாவனைகளையும் நான் குறிப்பிடவில்லை. உள்ளார்ந்த அதாவது சிந்தை, ஆவி மற்றும் இருதயத்திற்குரிய காரியங்களைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன்.
இஸ்லாம் உண்மை மார்க்கமாக இருக்குமென்றால், இயேசுவின் சீடர்கள் செய்தது போல முஹம்மதுவுடைய கட்டளைகளை அவருடைய தோழர்கள் கீழ்படிதலோடு நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டாமா?
முஹம்மதுவிற்கு இத்தனை நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து இவைகளைக் காட்டிலும் குறைவான நடத்தைகளில் வேறு எவைகளையாவது நாம் எதிர்பார்க்க வேண்டுமா? "இஸ்லாம் உண்மை மார்க்கமாக" இருந்திருக்குமென்றால், சிறந்த முஸ்லிம்களாகிய இவர்கள் மிகவும் கடினமான நேரத்தின் போது ஒரு நல்ல நேர்மையான ஆன்மீகவாதிகளாக செயல்பட்டிருக்க வேண்டாமா? இவர்கள் இப்படி சிறந்த நற்பண்புள்ளவர்களாக நடந்துக்கொண்டார்களா இல்லையா என்பதை இனி நாம் ஆராய்வோம்.
குறிப்பு:
• இந்த தொடர் கட்டுரைகளில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில், அறிவிப்பாளர்களின் முழு சங்கிலித் தொடரையும் (isnaads) நான் எழுத மாட்டேன்.
• ஹதீஸ்களில் இருக்கும் எல்லா வரிகளையும் நான் குறிப்பிட்டுக் காட்டமாட்டேன் ஏனென்றால் விளக்கமாக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகமான வரிகள் இந்த தலைப்பிற்கு பொருத்தமானதாக இல்லை.
• மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களை நான் நீல நிறத்தில் பதிக்கிறேன்.
• எல்லா குர்ஆன் வசனங்களும் பீஜே அவர்களின் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேறு தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டால், அது எந்த மொழியாக்கம் என்று தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
நாம் ஆய்வை தொடர்வோம்…
சிந்தனைக்கு உணவு
1 தீமோ 6:10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது, சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஸஹி புகாரி ஹதீஸ் - பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1344
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். [3]
. . . நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!" என்று கூறினார்கள்
இஸ்லாமிய அரச குடும்பத்தின் முக்கியமான நபர்கள்
அபூ பக்கர் - இவர் இஸ்லாமிய அரசின் முதல் கலிஃபா (பிரதான ஆளுநர்) ஆவார். "சரியாக வழிநடத்தப்பட்ட" நான்கு கலிஃபாக்கள் என்று சொல்லப்படுகிறவர்களில் இவர் முதன்மையானவர். இவர் முஹம்மதுவின் மரணத்தைத் தொடர்ந்து கலிஃபா ஆனார். இவர் முஹம்மதுவிற்கு மிக நெருக்கமான ஆண் நண்பர் ஆவார். இவர் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்து பிறகு மரித்துப் போனார். இவர் முஹம்மதுவுடைய ஒன்பது வயது மனைவியாகிய ஆயிஷாவுடைய தந்தை ஆவார் (http://answering-islam.org/Silas/childbrides.htm [4]). அபூ பக்கர் இஸ்லாமிய அரசின் ஆரம்பத்தை யுத்தத்தின மூலம் நிறுவினார்.
உமர் - இவர் இரண்டாவது கலிஃபா ஆவார். இவர் முஹம்மதுவுடைய இரண்டாவது நெருக்கமான தோழராவார். அவருடைய ஆட்சி சுமார் 12 அல்லது அதற்கு அதிகமான வருடங்கள் நீடித்தது. முஸ்லீமல்லாத நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி இவர் இஸ்லாமிய அரசை பெரிதாக விரிவடையச் செய்தார்.
அலி – இவர் முஹம்மதுவுடைய மருமகனாக இருந்தவர், முஹம்மதுவுடைய மகளாகிய பாத்திமாவைத் திருமணம் செய்திருந்தார். அலி யுத்தத்தில் முக்கியமான சில சாதனைகளை செய்த ஒரு வலிமையான சிறந்த முஸ்லீம் போர்வீரராக இருந்தார். "சிறப்பாக வழிநடத்தப்பட்ட" கலிஃபாக்களில் அலி நான்காவது நபர் ஆவார். அலிக்கு ஹஸேன், ஹுஸைன் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். (இவர்களில் ஹுஸைன் என்பவர் பின்னாட்களில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்).
பாத்திமா – முஹம்மதுவுடைய ஒரு மகள், அலிக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டவர். முஹம்மது மரித்த சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு இவர்களும் மரித்து விட்டார்கள்.
இப்னு அப்பாஸ் - முஹம்மதுவுடைய ஒன்று விட்ட சகோதரன். இவர் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களில் மிகச் சிறந்த ஒருவராக விளங்கினார். "யாத்திரிகனின் நம்பிக்கை (Reliance of the Traveller) [5]" இவரைப் பற்றிச் சொல்லும் போது, இவர் "1660 ஹதீஸ்களை அறிவித்துள்ளார், ஒரு பெரிய எண்ணிக்கையிலான குர்ஆன் விளக்கவுரைகளை வழங்கியிருக்கிறார், கலிஃபாவான உமர் சட்டப்படியான முடிவுகளை எட்டுவதற்கு இவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்" என்று கூறுகிறது.
அமைப்பு:
அக்கம் பக்கத்து இனத்தார்களை அச்சுறுத்துவது, மிரட்டடுவது மற்றும் பலவந்தமாக பணம் பறிப்பது போன்றவற்றால் முஹம்மது தனிப்பட்ட விதத்தில் ஒரு பெரும் செல்வத்தை குவித்தார். ஆனால், அவர் ஆடம்பரமாக வாழ்ந்தார் என்று அவசரப்பட்டு தவறான முடிவை நீங்கள் எடுத்துவிடாதீர்கள். முஹம்மது இந்த செல்வங்களை தன் விருப்பப்படி செலவிடவில்லை, மிகவும் ஆடம்பரமாக வாழவில்லை. அதற்கு பதிலாக முஹம்மது மிகவும் சிக்கனமாக வாழ்ந்தார். அவர் தன்னுடைய ஆஸ்திகளை தன்னுடைய ஏழை பின்னடியார்களுடைய நன்மைக்கு பயன்படுத்துவதற்கும், முஸ்லீம் அல்லாதவர்கள் மீது போர் தொடுப்பதற்கும் பயன்படுத்தினார். தன்னுடைய மரணத்திற்கு முன்பதாக முஹம்மது தன்னுடைய ஆஸ்தியை பற்றி ஒரு அறிக்கையை கொடுத்தார்: "முஹம்மது தமக்கு முன்னிருந்த நபிமார்களின் அடிச்சுவடையே பின்பற்றுவார், அதாவது தன்னுடைய குடும்பத்திற்கென்று எந்த சொத்தையும் முஹம்மது வைக்கமாட்டார்". அவருடைய ஆஸ்தியானது அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படமாட்டாது மாறாக முன்பு உபயோகப்படுத்தப்பட்டது போல தொடர்ந்து வினியோகிக்கப்பட வேண்டும். இருப்பினும் அவர் தன்னுடைய மனைவிகள் மற்றும் அடிமைகளுடைய பராமரிப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார். அவைகளைத் தவிர, கொடுத்து தீர்ப்பதற்கென்று ஒரு சில சிறிய பொருட்களை முஹம்மது சொல்லி வைத்தார்.
முஹம்மது மரித்த உடனே கலிஃபாத்துவம் (ஆட்சிபொறுப்பு) அபூ பக்கருக்கு கொடுக்கப்பட்டது. முஹம்மது மரித்த மறுநாளே, சதிதிட்ட சம்பவங்கள் கசியத் தொடங்கின . . .
(கீழே, "கிதாப் அல் தபாகத் அல் கதீர்" என்ற இஸ்லாமிய புத்தகத்திலிருந்து பல வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் கொடுக்கப்படுகின்றன - "Kitab al-Tabaqat al-Kabir, (Book of the Major Classes), Volume 2, by Ibn Sa'd, pages 391 – 394: [6].)
அல்லாஹ்வின் தூதருடைய சொத்தின் கணக்கும், அவர் வைத்துவிட்டுப் போன ஆஸ்தியும்.
அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்: "தினார்கள் மற்றும் திர்ஹாம்ஸ்கள் (பணம்) என்னுடைய வாரிசுகளுக்கிடையில் பங்கிடப்படக் கூடாது, நான் எதை வைத்துவிட்டுப் போகிறேனோ அது என் மனைவிமார்கள் மற்றும் வேலைக்காரர்களுடைய பராமரிப்புக்கு செலவிடப்பட்ட பிறகு தானதர்ம செயல்களுக்கு போகவேண்டும். (பக்கம் 391,392)
உமர் கூறுவதை நான் கேட்டேன், "அல்லாஹ்வின் தூதர் மரித்த நாளிலே அபூ பக்கருக்கு பயாஹ் அளிக்கப்பட்டது. அதற்கு பின் வந்த நாளிலே பாத்திமா அபூ பக்கரிடம் வந்தார்கள், அலி அவர்களோடு வந்தார். (பக்கம் 393)
பாத்திமா அபூ பக்கர் அவர்களிடம் வந்து தன் தந்தை விட்டுச் சென்ற சொத்தில் தனக்கு இருக்கும் பங்கை கொடுக்குமாறு கோரினார்கள். அல்- அப்பாஸ் கூடஅபூ பக்கர் அவர்களிடம் வந்து சொத்தில் தனக்கிருக்கும் பங்கை கொடுத்து விடும் படி கோரினார். அலியும் அவர்களோடு வந்திருந்தார். அப்பொழுது அபூ பக்கர்: "நாம் பரம்பரை சொத்துக்களை விட்டுச் செல்வதில்லை, நாம் சதகாஹ் என்றுச் சொல்லக்கூடிய தானதர்மத்தை மட்டுமே விட்டுச்செல்கிறோம்" என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார். யாருக்கு நபியவர்கள் பராமரிப்பு செலவுகளைச் செய்யச்சொன்னார்களோ, அவர்களுக்குதான் நான் பராமரிப்புகளை ஏற்படுத்துவேன்" என்று பதில் அளித்தார். இதற்கு அலி கூறினார், "சுலைமான் (சாலமோன்) தாவூத்தின் சொத்துக்களை பெற்றுக்கொண்டார், மேலும் சகரியா கூறினார், அவன் என்னுடை வாரிசாகவும், யாக்கோபுடைய பிள்ளைகளின் வாரிசாகவும் (சகரியாவும் யோவான் ஸ்நானனும்) இருப்பார்" என கூறினார். இதற்கு அபூ பக்கர் அவர்கள், "அல்லாஹ்வினால், இது இருப்பதைப் போன்றே இருக்கிறது, நான் அறிந்திருக்கிறது போலவே நீயும் அறிந்திருக்கிறாய்" என்று அலி அவர்களிடம் கூறினார். அப்போது அலி அவர்கள், "அல்லாஹ்வின் புத்தகமாகிய இது தான் பேசுகின்றது" என கூறினார். பிறகு அவர்கள் அமைதியாகிவிட்டார்கள் மற்றும் கலைந்து சென்றுவிட்டார்கள். (பக்கம் 393)
பாத்திமா அவர்கள் அபூ பக்கரிடம், "நீங்கள் மரிக்கும் போது உங்கள் சொத்துக்களை யார் வாரிசாக பெற்றுக்கொள்வார்கள்?" என்று கேள்வி கேட்டார்கள். இதற்கு அவர், "என்னுடைய பிள்ளைகளும் உறவினர்களும்" என்று பதில் அளித்தார்கள். அதற்கு பாத்திமா அவர்கள் "இறைத்தூதருடைய வாரிசாக நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டீர்கள், ஆனால், எங்களை மட்டும் தூரமாக்கிவிட்டீர்கள், இது எப்படி நியாயமானதாக இருக்கும்?" என்று கேட்டார்கள். இதற்கு அபூ பக்கர் அவர்கள், "ஓ, அல்லாஹ்வின் தூதருடைய மகளே, நான் உங்கள் தகப்பனுடைய நிலத்தையோ, தங்கத்தையோ, வெள்ளியையோ, அடிமைகளையோ, சொத்துக்களையோ எடுத்துக்கொள்ளவில்லை" என்று கூறினார்கள். இதற்கு பதிலாக பாத்திமா அவர்கள், "அல்லாஹ்வின் பங்கு (குமூஸ் அதாவது ஐந்தில் ஒரு பங்கு) என்று அவர் எங்களுக்கு ஒதுக்கினதும், எங்களுடைய பங்காக மட்டும் இருக்கின்றதுமான அது உங்கள் கைகளில் இருக்கின்றது" என்று கேட்டார்கள். அப்போது அபூ பக்கர் அவர்கள் "குமுஸ் என்பது நான் உயிரோடு இருக்கும் போது நான் புசிக்கும் படி அல்லாஹ் எனக்கு கொடுத்த பங்காகும், நான் மரித்த பிறகு இது முஸ்லீம்களுக்குள் பகிர்ந்து கொடுக்கப்படவேண்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லியதை நான் செவியுற்றேன் என்று பதில் அளித்தார்கள்." (பக்கம் 392)
அபூ பக்கர் கூறினார், "நாம் சொத்துக்களை வைத்துவிட்டு போவதில்லை, நாம் வைத்துவிட்டு போகும் சொத்துக்கள் "ஸதகா" என்ற தானதர்ம கணக்கில் சென்றுவிடுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் நிச்சயமாக சொன்னார். இந்த பணத்திலிருந்து முஹம்மதுவின் குடும்ப அங்கத்தினர்களின் பராமரிப்புக்கள் செய்யப்படும். அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தானதர்ம பங்கு (ஸதகா) எப்படி பகிர்ந்து கொடுக்கப்பட்டு வந்ததோ அதை நான் அல்லாஹ்வின் மீதா(ணையா)க மாற்றமாட்டேன்". அல்லாஹ்வின் தூதர், எப்படி செலவழித்துக் கொண்டிருந்தாரோ அதே விதத்தில் நான் தொடர்ந்து அதிலிருந்து செலவழிப்பேன். இப்படி பதில் அளித்து, அபூ பக்கர் அவர்கள், பாத்திமாவிற்கு எதையும் கொடுப்பதற்கு மறுத்து விட்டார்;. அதன் விளைவாக பாத்திமா அபூ பக்கரிடம் கோபமுற்றவராக அவரை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு பாத்திமா அவர்கள் தாம் மரிக்கும் வரைக்கும் அபூ பக்கர் அவர்களிடம் பேசவே இல்லை. அல்லாஹ்வின் தூதருக்கு பிறகு பாத்திமா அவர்கள் ஆறு மாதங்கள் உயிரோடிருந்தார்கள். (பக்கம் 392)
ஸஹி முஸ்லீம் ஹதீஸ் [7] பின்வரும் விவரங்களை கூடுதலாக கொடுக்கிறது.
ஸஹி முஸ்லீம் - 3618 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வாரிசுகள் ஒரு தீனாரைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் மனைவிமார் களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் உதவியாளரின் ஊதியமும் போக நான் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மம் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹிஹ் முஸ்லீம் - 3614 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது, அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் அவர்களைப் பார்த்து, "(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவையெல்லாம் தர்மமே' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவில்லையா?'' என்று கேட்டேன்.
கலிஃபா பொறுப்பை ஏற்ற பிறகு 2 வருடங்கள் கழித்து அபூ பக்கர் மரித்துப் போனார், உமர் கலிஃபாவாக பொறுப்பேற்றார். ஆனால், அலியும் இப்னு அப்பாஸூம் அந்த வாக்குவாதத்தை அந்த சொத்துக்கள் பற்றிய சர்ச்சையை விட்டுவிடுவதாக தெரியவில்லை - தங்களுக்கு பணம் வேண்டும் என்றே அவர்கள் நின்றனர். தொடர்ந்து நடந்த இந்த பிரச்சனையைப் பற்றி ஸஹி முஸ்லீம் கீழ்கண்டவாறு கூறுகிறது:
ஸஹி முஸ்லீம் - 3612
மாலிக் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
...அப்போது (உமர் (ரலி) அவர்களின் மெய்க்காவலர்) யர்ஃபஉ என்பார் வந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் பின்அவ்ஃப் (ரலி), ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகி யோர் (தங்களைச் சந்திக்க வந்துள்ளனர். தாங்கள் அவர்களைச்) சந்திக்க அனுமதி யளிக்கிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "ஆம்' என அவர் களுக்கு அனுமதியளித்தார்கள். அவர்கள் அனைவரும் உள்ளே வந்(து, அமர்ந்)தனர்.
பிறகு (சற்று நேரம் கழித்து) யர்ஃபஉ வந்து, "அப்பாஸ் (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர் களும் (தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். அவர்களைச்) சந்திக்க அனுமதிக்கிறீர் களா?'' என்று கேட்டார். உமர் (ரலி) அவர்கள் "ஆம்' என்று கூறி அவ்விருவருக்கும் அனுமதி அளித்தார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் பொய்யரும் பாவியும் நாணயமற்றவரும் மோசடிக்காரருமான (என் சகோதரர் மகனான) இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது (உஸ்மான் (ரலி) அவர்களும் உடன்வந்திருந்த அவர்களுடைய நண்பர்களும் அடங்கிய) அக்குழுவினர், "ஆம்; இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவருக்கு மிடையே தீர்ப்பளித்து ஒருவரது பிடியிலிருந்து மற்றவரை விடுவித்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். (இதற்காகத்தான் இவ்விருவரும் அக்குழுவினரை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தனர் என்று எனக்குத் தோன்றியது.)
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இருவரும் பொறுமையாக இருங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?''என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அக்குழுவினர் "ஆம் (அவ்வாறு சொன்னதை நாங்கள் அறிவோம்)'' என்று பதிலளித்தனர்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் (வாதியும் - பிரதிவாதியுமான) அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, "எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்ற னவோ அவன் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(நபிமார்களான எங்க ளுக்கு) யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச்செல்வதெல்லாம் தர்மமே' என்று சொன்னதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள்.
அவ்விருவரும் "ஆம் (அவ்வாறு அவர்கள் சொன்னதை நாங்கள் அறிவோம்)'' என்று விடையளித்தனர். உமர் (ரலி) அவர்கள், "(போரிடாமல் கைப்பற்றப் பட்ட) இந்த "ஃபைஉ'ச் செல்வத்தை தன் தூதருக்கு மட்டுமே உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவ ருக்கும் அவன் அதைச் சொந்தமாக்கவில்லை'' (என்று கூறிவிட்டு,) "(பல்வேறு) ஊராரிடமிருந்து எதைத் தன் தூதர் கைப்பற்றுமாறு அல்லாஹ் செய்தானோ அது அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும்... உரியது'' (59:7) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (இதற்கு முந்தைய வசனத்தையும் அப்போது ஓதினார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.) தொடர்ந்து "எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ நளீர் குலத்தாரின் செல்வங்களை (அவர்கள் நாடு கடத்தப்பட்ட பின்) உங்களிடையே பங்கிட்டுக் கொடுத்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களைவிட தம்மைப் பெரிதாகக் கருதவுமில்லை; உங்களை விட்டுவிட்டுத் தமக்காக அதை எடுத்துக்கொள்ளவு மில்லை. இறுதியாக (இறைத்தூதருக்கு மட்டுமே இறைவன் ஒதுக்கிய அந்நிதியிலிருந்து) இந்த (ஃபதக்) செல்வம் மட்டுமே எஞ்சியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை எடுத்து(ச் செலவிட்டு)வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதியுள்ளதைப் பொதுச் சொத்தாக ஆக்கினார்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றி ருக்கின்றனவோ அந்த அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை நான் கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர் "ஆம் (அறிவோம்)'' என்று பதிலளித்தனர். பிறகு அல்லாஹ்வைப் பொருட்டாக்கி அக்குழுவினரிடம் கேட்டதைப் போன்றே அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் அலீ (ரலி) அவர்களிடமும் "அதை நீங்கள் இருவரும் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள் இருவரும் "ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது (ஆட்சித் தலைவராக வந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய (ஆட்சிக்குப்) பிரதி நிதியாவேன்' என்று கூறினார்கள். (அச்செல் வத்தை தமது பொறுப்பில் வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்.) அப்போதும் நீங்கள் இருவரும் (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) சென்றீர்கள். (அப்பாஸே!) நீங்கள் உம்மு டைய சகோதரரின் புதல்வரிடமிருந்து (நபியிடமிருந்து) உங்களுக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டீர்கள். இதோ இவரும் (அலீயும்) தம் மனைவிக்கு அவருடைய தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபிமார்களான) எங்களுக்கு யாரும் வாரிசாகமாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே! என்று கூறினார்கள்' என்று பதிலளித்து (அதைத் தர மறுத்து)விட்டார்கள். அப்போது நீங்கள் இருவரும் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பொய்யராகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரராகவுமே பார்த்தீர்கள். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த விஷயத்தில் உண்மையே உரைத்தார்கள்; நல்லவிதமாகவே நடந்துகொண்டார்கள்; நேர்வழி நின்று வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் நான் பிரதிநிதியானேன்; அந்தச் செல்வத்துக்குப் பொறுப்பேற்றேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் செயல்பட்டதைப் போன்றே நானும் செயல்பட்டேன்.) அப்போது என்னையும் நீங்கள் இருவரும் பொய்யனாகவும் பாவியாகவும் நாணயமற்ற மோசடிக்காரனாகவுமே பார்த்தீர்கள். ஆனால், இந்த விஷயத்தில் நான் உண்மையே உரைத்தேன்; நல்ல விதமாகவே நடந்து கொண்டேன்; நேர்வழி நின்று, வாய்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான்.
பிறகு நீங்களும் (இதோ) இவரும் சேர்ந்து வந்தீர்கள். நீங்கள் இருவரும் ஒரே நிலைப் பாட்டில்தான் இருந்தீர்கள். நீங்கள் இருவருமே, அதை எங்கள் இருவரிடமும் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினீர்கள். அப்போது உங்கள் இருவரிடமும் நான் "நீங்கள் இருவரும் விரும்பினால் இச்செல்வத்தை ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அவ்வாறே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு வாக் குறுதியளிக்க வேண்டும்' என்று நான் கூறினேன்.
நீங்கள் இருவரும் அதன் பேரில் (என் நிபந்தனையை ஏற்று) அச்செல்வத்தைப் பெற்றுச் சென்றீர்கள். அவ்வாறுதானே?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும் "ஆம்' என்று பதிலளித்தனர். தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள், "பின்னர் நீங்கள் இருவரும் உங்களிருவர் இடையே தீர்ப்பளிக்கும்படி கோரி என்னிடம் வந்துள்ளீர்கள். இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டேன். உங்கள் இருவராலும் இதைப் பராமரிக்க முடியா விட்டால், என்னிடமே அதைத் திரும்ப ஒப்படைத்துவிடுங்கள் (அதை நானே பராமரித்துக் கொள்கிறேன்)'' என்று சொன்னார்கள்.
ஸஹி முஸ்லீம் - 3617
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள், அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித் தந்திருந்த ("ஃபைஉ'ச்) செல்வத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச்சென்றதிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்களான எங்களுக்கு) யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச்செல்பவை எல்லாம் தர்மம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள்'' எனக் கூறி (அதிலிருந்து பங்கு தர மறுத்து)விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துகளிலிருந்தும் மதீனாவில் அவர்கள் தர்மமாக விட்டுச்சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூபக்ர் (ரலி) அவர் களிடம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்த எந்த ஒன்றையும் நான் செய்யாமல் விடமாட்டேன். அதை நான் செய்தே தீருவேன். அவர்களுடைய செயல்களில் எதையேனும் நான் விட்டுவிட்டால் நான் வழி தவறிவிடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.
(அபூபக்ர் (ரலி) அவர்களின் மறைவுக் குப் பின்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் தர்மமாக விட்டுச் சென்ற சொத்தை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடமும் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் ஒப்படைத்தார்கள். அந்தச் சொத்தி(ன் பராமரிப்பி)ல் அப்பாஸ் (ரலி) அவர்களை அலீ (ரலி) அவர்கள் மிகைத்து (ஓரங்கட்டி)விட்டார்கள்.
கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்து களை (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (யாரிட மும் ஒப்படைக்காமல்) தமது பொறுப்பி லேயே வைத்துக்கொண்டார்கள். மேலும், "இவ்விரண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச்சென்றவை. அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடமைகளையும் அவசரத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சிக்குப் பொறுப்பேற்பவரிடம் இருக்க வேண்டும்'' என்று சொன்னார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்தபோது), "அந்த இரு சொத்துகளும் இன்றுவரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன'' என்று சொன்னார்கள்.
சுனான் அபூ தாவுத் [8] பின் வரும் விளக்கங்களை கூடுதலாக தருகிறார்.
சுனான் அபூ தாவுத் - புத்தகம் 19, எண் 2961 (ஆங்கில எண்)
உமர் இப்னு அல்-கத்தாப் கூறியதாவது:
மாலிக் இப்னு ஆவ்ஸ் அல்-ஹத்தான் கூறினார்: உமர் அறிவித்த அனேக அறிவிப்புக்களில், இந்த அறிவிப்பும் அடங்கும், அதாவது, அல்லாஹ்வின் தூதர் தனக்கென்று தனிப்பட்ட முறையில் மூன்று காரியங்களை பெற்றுக் கொண்டார்: அவை: பனு அந்-நதீர், கைபர், மற்றும் பதக் போன்ற போர்களில் கிடைத்த பொருட்கள் பற்றியதாகும்: பனு அந்-நதீர் இனத்தாரிடமிருந்து கிடைத்த அனைத்து சொத்துக்களும் இறைத்தூதரின் அவசர தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. பதக் மூலமாக கிடைத்த அனைத்து சொத்துகளும் பிரயாணம் செய்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. கைபார் போரின் மூலம் கிடைத்த சொத்துக்களை அல்லாஹ்வின் தூதர் மூன்று பாகங்களாக பிரித்தார். இவற்றில் இரண்டு பாகங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டது, ஒரு பாகம் இறைத்தூதருடைய குடும்பத்திற்காக ஒதுக்கப்பட்டது. அவருடைய குடும்பத்திற்கு வழங்கிய பிறகு ஏதாவது மீந்திருந்தால் அதை "இடம் பெயர்ந்து" வந்த ஏழைகளுக்கிடையில் பங்கிடுவார்.
இந்த சண்டையைப் பற்றி "தபாரியின் சரித்திரம் [9]" மேலும் விளக்கத்தை கொடுக்கிறது.
பாத்திமா மற்றும் அல்-அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரிடம் வந்து அல்லாஹ்வின் து}தருடைய சொத்தில் தங்களுடைய பங்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் "பதாக்" என்ற இடத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதருடைய நிலத்தையும், கைபர் போரில் மூலமாக கிடைத்த பணத்தில் அவருடைய பங்கையும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அபூ பக்கர் பதில் கூறினார்;, "நம்முடைய, அதாவது நபிமார்களுடைய சொத்துக்கள் வாரிசுகளால் பெற்றுக்கொள்ள முடியாது மேலும் நாம் எதை வைத்துவிட்டுப் போகிறோமோ அவைகள் தர்மச்செயல்களுக்கு கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். முஹம்மதுடைய குடும்பங்கள் அதிலிருந்து சாப்பிடட்டும் (1) " என்று அல்லாஹ்வின் தூதர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் செய்வதாக நான் கண்ட எந்த காரியத்தையும் கைவிடமாட்டேன், அவ்விதமாகவே நானும் செய்வேன்.
பாத்திமா அபூ பக்கரை புறக்கணித்தார் மேலும் தான் மரிக்கும் வரை அவரிடம் பேசவில்லை. பாத்திமாவை அடக்கம் செய்யும் போதும் அபூ பக்கரை அனுமதிக்காமல், இரவு நேரத்தில் அடக்கம் செய்தார் அலி. பாத்திமா உயிரோடிருந்த போது ஜனங்களிடத்தில் அலிக்கு மரியாதை இருந்தது, ஆனால் பாத்திமா மரித்த பிறகு மக்கள் அவர் பக்கமிருந்து தங்கள் கவனத்தை திருப்பிக் கொண்டார்கள். அல்-ஜூஹரியிடம் ஒருவர் கேட்டார், "ஆறு மாதங்களாக அலி தன்னுடைய தேச பக்திக்கான வாக்குறுதியை கொடுக்கவில்லையா?" "இல்லை, அலி தன்னுடையதை கொடுக்கும் வரையில் பணு ஹஷிமின் ஒருவரும் கொடுக்கவில்லை" என்று அவர் பதிலளித்தார். (பக்கம் 196, 197)
குறிப்பு 1 கூறுகிறது: "பணு ஹஷிமை மாற்றிவைப்பதில், குறிப்பாக முஸ்லீம் அரசியல் தலைமைத்துவத்தின் உரிமையிலிருந்து அலியை மாற்றிவைப்பதில் அபூ பக்கர் மற்றும் உமரால் எடுக்கப்பட்ட முதல் மற்றும் முக்கியமான படி தான் இது. முஹம்மதுவின் குடும்பத்தின் அங்கத்தினர் அலி என்று அங்கீகரித்து, அவருடைய சொத்துக்களை கொடுத்து இருந்தால், அலி ஆட்சியை நடத்துவதற்கான வாசல் விரிவாக திறந்து இருந்திருக்கும். மேலும் இந்த இரண்டு மூலங்களிலிருந்து வரும் வருமானமும் அதிகபடியாக இருப்பதினால், அலிக்கு இன்னும் வலிமை சேர்ந்து இருந்திருக்கும்.
பாடச் சுருக்கம்:
• தன்னுடைய சொத்துக்களை குடும்ப அங்கத்தினர்களுக்கு விட்டு விட்டு போவதில்லை என்று தான் மரிப்பதற்கு முன்னமே முஹம்மது அறிவித்தார்.
• முஹம்மதுவின் மரணத்திற்கு அடுத்த நாள், முஹம்மதுவின் மகள் பாத்திமா, பாத்திமாவுடைய கணவர் அலி மற்றும் இப்னு அப்பாஸ் ஆகியோர் அபூ பக்கரை சந்தித்து, முஹம்மதுவுடைய ஆஸ்தியிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய பங்குகளை கொடுத்து விடுமாறு கோரினர். முஹம்மது தனக்கு முன்னிருந்த நபிமார்களின் அடிச்சுவடுகளை பின்பற்றியிருந்தார், மேலும் அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கமாட்டார் என்று சொல்லி அபூ பக்கர் மறுத்துவிட்டார். இருப்பினும், முஹம்மது தவறாக புரிந்துக்கொண்டார் என்று அலி சரியாக சுட்டிக் காண்பித்தார், அதாவது நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை விட்டு சென்ற (தாவுத் சுலைமானுக்கும், ஜக்கர்யா யஹ்யாவுக்கும் (யோவான் ஸ்நானகனுக்கும்)) உதாரணங்களை குர்ஆன் பதிவு செய்திருக்கிறது என்று அலி சரியாக சுட்டிக் காண்பித்தார். இந்த எதிர்ப்பு பிரச்சனையின் இறுதி முடிவாக, தான் மரிக்கும் வரையிலும் பாத்திமா அபூ பக்கரை வெறுத்து அவரோடு பேசுவதற்கு மறுத்தார். தன்னுடைய மனைவியை இரகசியமாக அடக்கம் செய்து, அபூ பக்கர் வருகையை தடுத்துவிட்டு அவரை வெறுப்பதை அலியும் தொடர்ந்தார். அபூ பக்கரோடு அலி ஒப்புரவாகிக் கொண்டார், ஏனென்றால் செய்யப்பட வேண்டிய ஒரு சரியான செயல் அது தான் என்பதற்காக அல்ல மாறாக அவர் ஜனங்களுடைய ஆதரவை இழந்திருந்தபடியால், அதைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறு செய்வதை தவிர வேறு வழியில்லை என்பதால் அதைச் செய்தார்.
• ஆயிஷாவைத் தவிர முஹம்மதுவின் மற்ற மனைவிகளெல்லாம் தங்களுடைய பங்குகளை கேட்கும் படி புறப்பட்டனர், ஆனால் "எந்த உரிமை சொத்தும் இல்லை" என்பதைக் குறித்த முஹம்மதுவின் வார்த்தைகளை திரும்பத் திரும்பத் கூறி ஆயிஷா அவர்களைத் தடைசெய்தார்.
• அபூ பக்கர் மரித்த பிறகு அலியும் அப்பாஸும் தங்களுக்கு கிடைக்கவேண்டிய ஆஸ்தியின் பங்கு பற்றி உமரிடமும் கேட்டனர். இதற்கிடையில், தங்கள் இருவரில் (அலி மற்றும் இப்னு அப்பாஸ்) யாருக்கு சொத்துக்கள் கிடைக்கவேண்டும் என்று இவ்விருவரும் வாங்குவாதங்களில் இறங்கினர். அலி ஒரு "பாவியான, துரோகியான, நேர்மையற்ற பொய்யன்!" என்று அப்பாஸ் அழைத்தார். அவர்கள் இருவரையும் உமர் கடிந்து கொண்டு, அவர்கள் இருவரும் முன்பு அபூ பக்கரை ஒரு பொய்யராகவும், பாவியாகவும், துரோகியாகவும், நேர்மையற்றவராகவும் கருதினர் என்பதை குறிப்பிடுகிறார்!. பிறகு உமர், அவர்கள் தன்னையும் ஒரு பொய்யனாக, பாவியாக, துரோகியாக, நேர்மையற்றவனாக நினைக்கிறார்கள் என்பதையும் அவர்களுடைய முகங்களுக்கு நேராக கூறுகிறார். பிறகு, அவர்களுடய அழுத்தம், கோபம் மற்றும் பொது புறக்கணிப்பை உமரால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை,, முஹம்மதுவின் கட்டளைகளை தொடர்ந்து நிறைவேற்றவும் முடியாதவராக இருந்தார், ஆகையால் அவர்கள் இருவருக்கும் முஹம்மதுவின் ஆஸ்திகளில் சிலவற்றை கொடுத்துவிட ஒப்பந்தம் செய்து கொண்டார் (தான் பராமரித்து வந்தது போலவே அவர்களும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற போலியான தோற்றத்தை உருவாக்கினார்).
கலந்துரையாடல்:
முஹம்மது மரித்த ஒரு நாளே ஆனே நிலையில் அந்த இருண்ட குடும்பத்தின் அற்பமான சண்டை துவங்கிவிட்டது. நிச்சயமாக அங்கே துக்கம் அனுசரிக்கும் நாட்கள், மற்றும் ஆன்மீக அமைதி சாந்தி இருக்கவில்லை. முஹம்மது மரித்த துக்கத்தினால், அவரது குடும்ப நபர்கள் இன்னும் நெருக்கமானவர்களாக மாறி, ஒற்றுமையுடன் ஒத்துழைக்கும் ஒரு குழு இது தான் என்ற நிலை அங்கு காணப்படவில்லை. முஹம்மதுவின் குடும்பம் நெருக்கமாக ஒன்று கூடும் கூடுகை இருந்ததா? மாறாக, எல்லாரும் உடனே பணத்தை அடையும் வழிகளிலே நகர்ந்து கொண்டிருந்தனர். இப்போது இங்கே கூர்ந்து கவனியுங்கள், வலிமையான இருண்ட உணர்ச்சிகள் அங்கே இருப்பதை நாம் காணமுடியும்.
பேராசை (GREED)
முஹம்மதுவுடயை நெருக்கமான குடும்ப அங்கத்தினர்களால் காண்பிக்கப்பட்ட பேராசையை கவனிக்கவும். அந்த (முஹம்மதுவின்) சரீசம் குளிர்ந்துவிட்டது தான் தாமதம் அதற்குள்ளாகவே அவர்கள் சொத்திலிருக்கும் தங்கள் பங்கை கேட்டு வாதாடிக் கொண்டிருந்தனர். இந்த ஆஸ்தியில் இச்சை கொண்டவர்களாக இருந்தபடியால், தங்களுக்குள்ளே பகையோடு வீண் சண்டையிட்டுக் கொண்டனர். பேராசை அவர்களுடைய உள்ளத்தில் இரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருந்தது. அபூ பக்கர் மரித்த பிறகு அவர்கள் உமரிடத்திலும் வந்து அதே சொத்துக்கள் சம்மந்தப்பட்டகோரிக்கைகளை வைக்கிறார்கள்.
வெறுப்பு (HATRED)
ஆஸ்தியை பெறும் முயற்சியில் புறந்தள்ளப்பட்ட போது அவர்கள் அபூ பக்கரை வெறுத்தார்கள். அலியும் பாத்திமாவும் தம்முடையமரண நாள் வரைக்கும் அவரை வெறுத்தார்கள். பகையினிமித்தம், அபூ பக்கருக்கு பாத்திமா மரித்துப் போனதையும் கூட அறிவிக்க மறுத்து இரகசியமாக அடக்கம் செய்து விட்டார் அலி. இப்னு அப்பாஸ், பாத்திமா, அலி இம்மூவரும் அபூ பக்கரை ஒரு "பாவியாக, பொய்யராக, துரோகியாக மற்றும் நேர்மையற்றவாராக" கருதினர்.
சுவாரஸ்யமானது, ஆகையால், நாம் காணத் தவறக்கூடாத ஒரு விஷயம்:
அபூ பக்கர் காரணம் காட்டி, அலியின் வேண்டுகோளை நிராகரித்த போது, முஹம்மதுவிற்கு தன் சொந்த குர்ஆனே தெரியவில்லை என்று அலி சுட்டிக்காட்டினார். முஹம்மது மனப்பாடம் செய்திருந்ததாக எண்ணப்பட்ட ஒரு புத்தகம் (குர்-ஆன்) சொல்லுகிறது, நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விட்டுச் சென்றார்கள் என்று கூறுகிறது - பார்க்க குர்ஆன் ஸூரா 27:16 மற்றும் 19:6. அலி அவர்கள் இந்த வசனங்களை அங்கே கூடியிருந்த குழுவிடத்தில் சுட்டிகாட்டி விட்டார், அவர்கள் அனைவரும் அமைதியானார்கள், வாயடைத்துப்போனார்கள், பதில் கூறமுடியவில்லை, ஏனென்றால் முஹம்மதுவுடைய தவறை அலி சுட்டிக்காட்டி நிரூபித்தபடியால் அவர்கள் அதிர்ச்சியடைந்து போனார்கள். இதையெல்லாம் விட, இது முஹம்மதுவுடைய சொந்தக் குர்ஆன், அதிலே அவர் தவறு செய்து விட்டார்! அலி சரியாக இருக்கிறாரென்று அறிந்த அபூ பக்கரால் பதிலுக்கு செய்ய முடிந்ததெல்லாம், "நல்லது இது அவ்விதமே இருக்கப் போகிறது" என்று சொல்லியது தான்.
விரிவுரையும் கேள்விகளும்
"பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" – என்ற பைபிளின் வாக்கியம் உண்மையாக இருக்கின்றது. இந்த முஸ்லீம்கள் - முஹம்மதுவின் பக்தியான குடும்ப நபர்கள் உலக ஆதாயங்களை இச்சித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இச்சை அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளும் படி செய்தது. இப்போது ஸூரா 8:63ன் நிலை என்ன? இவர்களுடைய உள்ளங்களெல்லாம் ஒன்றாக (அன்பினால்) பிணைக்கப்பட்டிருந்தது என்று நீங்கள் எண்ணுவீர்களா? அநேகமாக ஒரு காலகட்டத்தில், நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள். ஆனால் இங்கே, அவர்களை ஒன்றாக சேர்ப்பதற்கு, அல்லது பிணைப்பதற்கு அல்லாஹ் இயலாதவராக இருக்கிறார். அல்லது அல்லாஹ்வின் தையல் வேலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லமாட்டீர்களா? மிகச் சிறந்த இந்த முஸ்லீம்கள் ஒன்றாக இருக்கிறவர்களாக அல்லது பிணைக்கப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கமாட்டீர்களா? அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு, நம்பிக்கை மற்றும் உண்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்களா? அதுவும் முஹம்மது அப்போது தான் மரித்திருந்த நிலையில். உண்மையான இஸ்லாமிய ஆன்மீகம், அமைதி பக்தி அங்கே காணப்படவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்கமாட்டீர்களா? இஸ்லாமுடைய பக்தி சமர்ப்பணத்திற்கு என்ன ஆச்சு? ஏன் அது இவ்வளவு வேகமாக நீராவியாக மறைந்துவிட்டது?
இஸ்லாமை அதன் முதல் "அரச குடும்பமே" இவ்வளவு சீக்கிரத்தில் புறக்கணித்துவிட்டதால், உண்மையாகவே இஸ்லாம் என்பது ஒரு சரியான மார்க்கமாக அவர்களுக்கு இருந்திருக்குமா?
இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட ஆதார நூற்பட்டியல்:
1) The Bible, New International Version, pub. by Zondervan, Grand Rapids, Michigan
2) The Nobel Quran, translated by Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali and Dr. Muhammad Muhsin Khan, published by Maktaba Dar-us-Salam, PO Box 21441, Riyadh 11475, Saudi Arabia, 1994
3) Bukhari, Muhammad, "Sahih Bukhari", Kitab Bhavan, New Delhi, India, 1987, translated by M. Khan
4) answering-islam.org/Silas/childbrides.htm
5) al-Misri, Ahmad, "Reliance of the Traveler", (A Classic Manual of Islamic Sacred Law), translated by Nuh Ha Mim Keller, published by Amana publications, Beltsville, Maryland, USA 1991
6) Ibn Sa'd, (d. 852 A.D.), "Kitab al-Tabaqat al-Kabir", (Book of the Major Classes), Volume 2, translated by S. Moinul Haq, Pakistan Historical Society.
7) Muslim, A., "Sahih Muslim", translated by A. Sidiqqi, International Islamic Publishing House, Riyadh, KSA.
8) Abu Dawud, Suliman, "Sunan", al-Madina, New Delhi, 1985, translated by A. Hasan
9) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), Volume 9, State University of New York Press, 1993. Translated by Ismail K. Poonawala
ஆங்கில மூலம்:ISLAM'S ROYAL FAMILY - PART ONE: MUHAMMAD'S WEALTH